டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது சமூகநீதி மற்றும் நலத்திட்டங்கள் எந்தளவுக்கு மக்களை சென்று சேர்ந்துள்ளது என்பது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்ய தயாராகி வருகிறது. இதற்காக திங்கள்கிழமை நடைபெற உள்ள உயர்மட்டக் கூட்டத்தில், அரசின் முக்கிய துறைகளின் செயல்பாடுகள், மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு தனது நலத்திட்டங்கள் எந்தளவுக்கு அடித்தட்டு மக்களை சென்றடைந்துள்ளன என்பதை கண்டறிய விரிவான ஆய்வை நடத்த ரெடியாகி வருகிறது. வரும் நாட்களில் அமைச்சகம் வாரியாக இந்த ஆய்வுகள் தொடங்கும் என தெரிகிறது.
இந்த ஆய்வு வழக்கமான அமைச்சக வாரியான செயல்பாட்டு ஆய்வாக மட்டும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அமைச்சகத்தின் செயல்பாடுகளுடன், அந்த அமைச்சகங்களை நிர்வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என தெரிகிறது. இதற்காக இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கல்வி, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல், சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அமைச்சகங்கள் இந்த ஆய்வில் முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகநீதி, நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் மற்றும் அவை பயனாளிகளையும் சென்றடைவது ஆகியவை மோடி அரசின் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அரசு அறிவிக்கும் திட்டங்களின் பலன்கள் முறைகேடுகளால் தடுக்கப்படாமல், உரிய பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமரின் ஜன் தன் யோஜனா, பிரதமரின் உஜ்வலா யோஜனா, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் கிசான் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் மற்றும் ஸ்வச் பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் நலத்திட்ட கொள்கையில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எவ்வளவு எட்டப்பட்டுள்ளன, செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் என்ன, மேலும் எதில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்பவை ஆய்வில் எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஏழை, நலிவடைந்த மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட அரசின் நீண்ட கால இலக்குகள் குறித்தும் அமைச்சகங்களின் செயல்பாடுகள் மதிப்பிடப்படலாம். அரசின் நலத்திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்லாமல், அவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன, அதன் பலன்கள் மக்களை எந்த அளவுக்கு சென்றடைகின்றன, எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படுகின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது வழக்கமாக நடைபெறும் ஆய்வு கூட்டம் இல்லை. மாறாக குறிப்பிட்ட அமைச்சகங்கள் எந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளன.. அல்லது அதில் என்ன சிக்கல்கள் உள்ளன.. அப்படி சிக்கல்கள் இருந்தால் அதை சரி செய்வது எப்படி என்பதை ஆய்வு செய்வதற்கான கூட்டமாகும். மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என சொல்லப்படும் நிலையில், இந்த ஆய்வு கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் கிடைக்கும் தகவல்களை வைத்தும் கூட அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது.பிரதமர் மோடி
மத்திய அரசு திட்டங்கள்
விரிவான ஆய்வு
அமைச்சரவை மாற்றம்