டெல்லி: துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கி சென்ற பயணிகள் விமானத்தை கடத்த முயற்சி நடந்தது. இதை இந்திய விமானி தைரியமாக முறியடித்தார். இதனால் 180 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விமானியை ஹீரோ என்று பாராட்டியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, "மிக கடுமையான ஆபத்து நிலவியபோதும், தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காயம் ஏற்பட்டபோதும், மற்றவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்ற கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசைக்க முடியாத உறுதியும், துணிச்சலும் பாராட்டுக்குரியது.
இந்த வீரமிக்க செயல்தான் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி, மிகப்பெரிய விமான பேரழிவை தடுத்துள்ளது. கேப்டனின் இந்த செயலை எண்ணி ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைகொள்கிறது. அவர் ஒரு ஹீரோ. விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். நேற்று வழக்கம்போல துபாய் விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் நோக்கி 180 பயணிகளுடன் பயணிகள் விமானம் புறப்பட்டது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வழக்கத்திற்கு மாறாக பறந்தது. முதலில் விமானத்திலிருந்து அவசர எச்சரிக்கை குறியீடு தரையில் இருக்கும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. எரிபொருள் லீக், பறவை மோதல், மருத்துவ அவசர உதவி, தொழில்நுட்ப கோளாறு போன்ற நேரங்களில் இந்த குறியீடு கொடுக்கப்படும். எனவே கட்டுப்பாட்டு அறையிலிருந்து என்ன பிரச்சனை என கேட்க தொடங்கியிருக்கின்றனர். பதில் இல்லை. அடுத்த சில நொடியில் இன்னொரு குறியீடு வந்திருக்கிறது. 7500 என்பதுதான் அந்த குறியீடு. விமானம் கடத்தப்படும்போதுதான் இந்த சிக்னல் கொடுக்கப்படும். இது கிடைத்தவுடன் விமான பாதுகாப்புதுறை தொடங்கி ராணுவம் வரை அனைத்தும் உஷார்படுத்தப்பட்டது. இதெல்லாம் நடந்துக்கொண்டிருக்கும் நேரத்தில், விமானத்தில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் நடந்தது. அதாவது விமானம் பறந்துக்கொண்டிருந்த 40,000 அடியிலிருந்து சட்டென 15,000 அடி உயரத்துக்கு கீழே இறங்கியது. அதுவும் 30 வினாடியில். இவ்வளவு குறைவான நேரத்தில்.. இவ்வளவு கீழே எந்த விமானமும் இறங்காது. மட்டுமல்லாது போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தை சேர்ந்த இந்த விமானம்.. சைஸில் கொஞ்சம் பெரியது. இந்த விமானத்தை 15,000 உயரத்தில் ஓட்ட அனுமதியே கிடையாது. எனவே, மொத்த ராணுவமும் விமானத்தில் என்ன நடக்கிறது? என்று பதற்றமடைந்தது. உள்ளே நடந்தது என்ன? விமானத்திற்குள் பெரிய போர்க்களமே நடந்திருக்கிறது. விமானத்தை ஓட்டியது 2 பேர். ஒருவர் இந்தியரான கேப்டன் ஸ்மித் மச்சார். இவர்தான் விமானத்தின் தலைமை விமானி. அதாவது இவர் எடுப்பதுதான் இறுதி முடிவு. இன்னொருவர் ஓமன் நாட்டை சேர்ந்தவர். விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோது கத்தியை எடுத்து கேப்டனை குத்தியிருக்கிறார். அவரை கொன்றுவிட்டு விமானத்தை கடத்துவதுதான் பிளான். ஆனால், உஷாரான கேப்டன் சட்டென கூச்சல் போட்டு உதவி கேட்டிருக்கிறார். உடனடியாக விமானத்திற்குள் இருந்த சக பயணிகள், அவரை மீட்டு, ஓமன் விமானியை பிடித்து, விமானத்தை பத்திரமாக சவுதியில் தரையிறக்கியிருக்கின்றனர். இந்த சம்பவத்தில் கேப்டன் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும்.. தைரியமாக செயல்பட்டு உதவி கேட்டிருக்கிறார். அப்படி நடக்கவில்லை எனில் மொத்த விமானமும் கடத்தப்பட்டிருக்கும். கடத்தப்பட்ட விமானத்தை தரையில் மோதி வெடிக்க வைப்பதுதான் பிளான். இதை இந்திய விமானி முறியடித்துள்ளார். எனவே இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.என்ன நடந்தது?