டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், அதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தபடி உரையாற்றினார். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த வேண்டும் என்று கூறிய அவர், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியையும் கிண்டலடிக்கும் வகையில் பேசினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. எப்போதும் நாடாளுமன்றம் கூடும் நாளில் பிரதமர், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செய்தியாளர்களைச் சந்திப்பார். அதன்படி இன்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இருந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல் வேகமாக வளர்ந்து வருவதாகவும், இளைஞர்களின் திறமையால் இந்தியா சர்வதேச அரங்கில் புதிய உயரத்தை எட்டுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சமீபத்தில் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ராக்கெட் ஏவிய சாதனையை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் குழுவினரின் சராசரி வயது வெறும் 28 மட்டுமே என தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "இந்திய இளைஞர்கள் விண்வெளியில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர். ஸ்கைரூட் நிறுவனத்தில் பணியாற்றிய குழுவின் சராசரி வயது வெறும் 28. இத்தகைய இளைஞர்கள்தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். நான் 56 வயதான இளைஞரைப் பற்றி பேசவில்லை" என்று ராகுல் காந்தியை மறைமுகமாகக் கிண்டலடித்தார். தொடர்ந்து பேசிய மோடி, உலகின் வெகு சில நாடுகளுக்கு மட்டுமே தனியார் நிறுவனங்கள் மூலம் விண்வெளி சாதனைகளை நிகழ்த்தும் திறன் இருப்பதாகக் கூறினார். அவர் மேலும், "இந்திய இளைஞர்கள் விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எழுத ஆரம்பித்துள்ளனர். இது நமக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பும் செல்வாக்கும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. நமது இளைஞர்களின் கனவுகளும், திறமைகளும் விண்வெளியைப் போல எல்லையற்றவை. கடந்த ஒரு மாதத்தில் இந்தியா பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், விண்வெளி துறையிலும் பல வெற்றிகளை நாம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்துப் பெருமைப்பட வேண்டும். இந்த வெற்றிகளுக்குப் பின்னால் இந்திய விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களும் முக்கிய காரணம்.. நாடு சீர்திருத்த எக்ஸ்பிரஸ் பாதையில் பயணித்ததால் தான் நமது இளைஞர்கள் இத்தகைய தைரியத்துடன் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற முடிகிறது. நான் சில சாதனைகளை மட்டும் சொல்கிறேன். ராஜஸ்தானில் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தியாவின் மூன்றாவது செமிகண்டக்டர் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அதேபோல், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த இயந்திரம் மற்றும் ஹைட்ரஜன் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது" என்றார். நாடாளுமன்றத்தில் இந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுக்க பரபரப்பு இருக்கும் என்றே தெரிகிறது. ஒரு பக்கம் மத்திய அரசு பல முக்கியமான மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இன்னொரு பக்கம் நீட் விவகாரம், e20 விவகாரம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 13ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், அதில் கிட்டத்தட்ட எல்லா நாட்களும் அவையில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.கிண்டல்
விண்வெளி துறை
சீர்திருத்தங்கள்
நாடாளுமன்ற கூட்டத்தொடர்