நொய்டா: வங்கியில் பல ஆண்டுகளாக சேமித்த பணம் திடீரென காணாமல் போனால் எப்படி இருக்கும்? எந்தவொரு ஒரு டாக்குமெண்டிலும் கையெழுத்து போடாமல்.. ஒரு மெசேஜ் கூட இல்லாமல் மொத்த சேமிப்பும் பறிபோனால் எப்படி இருக்கும்.. பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு இதுபோல தான் நடந்துள்ளது. அங்கு சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு தொகைகளில் இருந்து இப்படி தான் சுமார் ரூ.35 கோடி மாயமாகியுள்ளது.
நமது நாட்டில் வங்கி சார்ந்த மோசடி சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து திடீர் திடீரென பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இப்போதும், அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தான் பணத்தை பறிகொடுத்துள்ளனர். அங்குள்ள ஐசார் பகுதி வங்கிக் கிளையில், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு தொகைகளில் இருந்து சுமார் ரூ.35 கோடி மாயமானதாக புகார்கள் எழுந்துள்ளன. தங்கள் அனுமதியின்றி பணம் எடுக்கப்பட்டதாகவும், பரிவர்த்தனைகள் குறித்து வங்கியிலிருந்து எந்தவொரு எச்சரிக்கை மெசேஜும் வரவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த புகார்களைத் தொடர்ந்து, வங்கி கிளை மேலாளர் உட்பட பல ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலீசாரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். அப்படி பணத்தை இழந்த ஒருவர் தான் ஹனீப் கான். இவரது சேமிப்பு கணக்கில் ரூ.39 லட்சம் இருந்துள்ளது. ஆனால், தற்போது அவரது கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை. இது குறித்து அவர் கூறுகையில், "எனது சேமிப்புக் கணக்கில் ரூ.39 லட்சம் இருந்தது. ஆனால், இப்போது அதில் பணமே இல்லை. பணத்தை எடுக்க நான் எந்த டாக்குமெண்டிலும் கையெழுத்து போடவில்லை. பரிவர்த்தனை மெசேஜ் கூட எனக்கு வரவில்லை" என்று தெரிவித்துள்ளார். தனது அனுமதி இல்லாமல் பணம் எப்படி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்பதே அவரது பிரதான கேள்வியாக இருக்கிறது. இவர் மட்டுமில்லை பலரும் இதேபோல தங்கள் பணத்தை இழந்துள்ளனர். குறிப்பாக அரசுக்கு தங்கள் விவசாய நிலத்தை கொடுத்துவிட்டு இழப்பீடு தொகையை பெற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்தும் பணம் பறிபோய் உள்ளது. விஜேந்திர சிங் என்ற விவசாயி, தனது சேமிப்பு கணக்கில் ரூ.88 லட்சம் இருந்ததாகவும், தற்போது வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்தப்பட்டதற்காக அவரிடம் இருந்து கிடைத்த இழப்பீட்டு தொகை அப்படியே பறிபோய்விட்டது. பிரிண்டா கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி கணக்கில் இருந்தும் பணம் பறிபோய் இருக்கிறது. தேநீர் மற்றும் சமோசா விற்பனை செய்து வரும் அவரது நிலமும், ஜேவர் விமான நிலைய திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அவருக்கு ரூ.1.29 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினர் கணக்கை சரிபார்த்தபோது ரூ.1.18 கோடி மாயமாகியுள்ளது. இப்படி சுமார் ரூ.35 கோடி மாயமானதாக புகார்கள் எழுந்துள்ளன. சேமிப்பு கணக்குகள் மட்டுமின்றி, நிரந்தர வைப்பு தொகைகளிலும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. எனினும், பணம் எப்படி எடுக்கப்பட்டது.. இதில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. வாடிக்கையாளர்களின் புகார்களை தொடர்ந்து, கிளை மேலாளர் உட்பட பல ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பணம் பறிபோனது
மெசேஜ் கூட இல்லை
ரூ.35 கோடி மாயம்
போலீஸ் விசாரணை