டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று டெல்லி கன்னாட் பிளேஸில் CJP, AISA உள்ளிட்ட அமைப்பினர் தேசியக்கொடியை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து AISA தலைவர் நேஹா போராவும், CJP தலைவர் அபிஜித் தீப்கேவும் கைது செய்யப்பட்டனர். தற்போது தீப்கே மீது FIR பதியப்பட்டிருக்கிறது.
நேற்று மாலை இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 5 மணி நேரம் கழித்து.. விடியற்காலையில் நேஹா போரா மட்டும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். தீப்கே மீது BNSS பிரிவு 126 மற்றும் 170-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்பு அவர் இன்று காலை ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.
கடந்த முறை இதேபோல போராட்டம் நடத்தியபோது நீதிமன்றம், தீப்கேவை ரூ.50,000 பிணையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்கிற நிபந்தனைகளுடன் விடுவித்தது. நேற்று நடந்த போராட்டத்தில் தீப்கே பங்கேற்றதன் மூலம் இந்த நிபந்தனையை மீறியிருப்பதாகவும், கன்னாட் பிளேஸ் பகுதிக்கு போக கூடாது என்று டெல்லி காவல்துறை கொடுத்த 2 நோட்டீஸை தீப்கே மதிக்கவில்லை என்றும் கூறி காவல்துறை அவர் மீது FIR பதிவு செய்திருக்கிறது. கையில் தேசிய கொடியை ஏந்தி பேரணி செல்வது அவ்வளவு பெரிய குற்றமா? தீப்கே எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்று இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. தீப்கேவின் வழக்கறிஞர் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்று CJP அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது. அதேபோல நேற்று மாலை கைது செய்யப்பட்ட நேஹா, ஆர்.கே.புரம் காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பல மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார். உடல்நிலை சரியில்லாத அவரை காவல்துறை சட்டவிரோதமாக கைது செய்து வைத்திருந்தது. அவரது வழக்கறிஞரையோ, மருந்துகளையோ காவல்துறை அனுமதிக்கவில்லை என்று AISA குற்றம்சாட்டியிருக்கிறது. முன்னதாக கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த CJP நிர்வாகிகள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.