உச்சக்கட்ட பரபரப்பு.. டெல்லியை முற்றுகையிடும் விவசாய அமைப்புகள்.. நொடிக்கு நொடி அதிகரிக்கும் பதற்றம்

  • டெல்லி: தலைநகர் டெல்லியில் ஏற்கனவே கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மற்றொரு புறம் பஞ்சாப் விவசாயிகளும் தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் விவசாயிகள் அதிகளவில் திரண்டு வரும் நிலையில், பதற்றம் அதிகரித்துள்ளது.

    Advertisement

    கடந்த சில வாரங்களாகவே நீட் முறைகேடுகள் தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றைய தினம் அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போது நிலைமை கையைவிட்டுப் போனது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. இது ஒரு பக்கம் இருக்க பஞ்சாப் விவசாயிகள் திடீரென டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.

    Advertisement

    விவசாய அமைப்புகள்

    இந்தியா - அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று மகாபஞ்சாயத்தை பஞ்சாப் விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில், அதில் பங்கேற்க பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர். டெல்லியில் உள்ள கிசான் காட் பகுதியில் நடைபெறும் இந்த மகாபஞ்சாயத்தை விவசாய அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் 550 விவசாய சங்கங்கள் இதில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

    கடும் எதிர்ப்பு

    இது தொடர்பாக கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (பஞ்சாப்) தலைவர் ஜெர்மன்ஜித் சிங் பண்டாலா கூறுகையில், "இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரானது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டு விவசாயிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். இந்தியாவின் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

    Advertisement

    அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. அங்குள்ள விவசாயிகளுக்கு அந்நாட்டு அரசு பெருமளவில் மானிய உதவிகளையும் வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் பெரும்பாலான விவசாயிகளிடம் இரண்டரை ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதுடன், அரசின் நிதியுதவியும் மிகவும் குறைவாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து குறைந்த விலையில் வேளாண் பொருட்கள் இந்திய சந்தைக்குள் வந்தால், இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாத சூழல் உருவாகி, அவர்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்படும்" என்று பண்டாலா எச்சரித்தார்.

    குற்றச்சாட்டு

    மேலும், முந்தைய அரசுகள் இந்திய வேளாண் துறையை வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து பாதுகாத்ததாகவும், தற்போது மத்திய அரசு அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக இந்த வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த ஒப்பந்தத்தின் பாதிப்பு விவசாயத்தை மட்டுமல்லாமல், சிறு தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் வேலைவாய்ப்புகளையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Advertisement

    எல்லையில் பதற்றம்

    பஞ்சாப் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி மகாபஞ்சாயத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ஏற்கனவே மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெறுவதால் விவசாய அமைப்புகளை டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதிக்கவில்லை. பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப்பில் இருந்து அவர்கள் ஹரியானா நுழைவதை தடுக்கும் பலத்த தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    English Summary

    Hundreds of farmers from Punjab have reached Delhi to participate in a Mahapanchayat(டெல்லியை முற்றுகையிடும் பஞ்சாப் விவசாயிகள்): Punjab Farmers Reach Delhi amid CJP protest.