தாக்க போகுது AI.. உலகெங்கும் கொத்து கொத்தாக காலியாகும் வேலைகள்? ரகுராம் ராஜன் நேரடி எச்சரிக்கை

  • டெல்லி: ஏஐ காரணமாக நமக்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டு வருகிறது. அதேநேரம் ஏஐ காரணமாக வேலையிழப்புகள் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ காரணமாகவே வேலைவாய்ப்பு சந்தையில் பேரழிவு வரப்போவதாக எச்சரித்துள்ள ரகுராம் ராஜன், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    ஒரு பக்கம் ஏஐ மின்னல் வேகத்தில் வளர்ந்து வந்தாலும் கூட அதனால் வேலையிழப்புகள் பெரியளவில் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

    Advertisement

    ரகுராம் ராஜன்

    ஏஐ வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் அது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருவதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஆனால், ஏஐ காரணமாக எத்தனை வேலைகள் பாதிக்கப்படும், எந்தெந்த துறைகள் அதிகம் பாதிக்கப்படும், இந்த மாற்றம் எவ்வளவு வேகமாக நடைபெறும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஏஐ மூலம் ஏற்படக்கூடிய இந்த மிக பெரிய வேலைவாய்ப்பு மாற்றத்தை "Jobocalypse" என ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக பேரழிவை ஏற்படுத்தும் நிகழ்வை ஆங்கிலத்தில் "Apocalypse" என்று குறிப்பிடுவார்கள். வேலைவாய்ப்பு சந்தையில் ஏஐ காரணமாக அதுபோல ஒரு பேரழிவு ஏற்படும் என்பதை குறிப்பிடும் வகையிலேயே ரகுராம் ராஜன் Jobocalypse என்ற வார்த்தையை குறிப்பிடுகிறார்.

    Advertisement

    தயங்கும் நிறுவனங்கள்

    அதேநேரம் ஏஐ காரணமாக என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது என்றும் நிறுவனங்கள் ஏஐயை எந்த வேகத்தில் ஏற்று கொள்கின்றன என்பதில்தான் அதன் தீவிரம் இருக்கும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வந்தாலும், நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக இல்லை என ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

    20க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனங்களில் தற்போது சுமார் 20 சதவீதம் மட்டுமே ஏஐயை பயன்படுத்துகின்றன. 250க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட பெரிய நிறுவனங்களில் இந்த அளவு 37 சதவீதமாக உள்ளது. ஏற்கனவே உள்ள பணிச்சூழலில் ஏஐயை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்கள், செலவுகள் குறித்த தெளிவின்மை, ஏஐ மாடல்களின் தேவை என பல விஷயங்கள் இருப்பதால் பல்வேறு நிறுவனங்களும் ஏஐ பயன்பாட்டை குறைக்க தொடங்கியுள்ளதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தெளிவு இல்லை

    பல பெரிய நிறுவனங்களில் இன்னும் ஏஐ திட்டங்கள் சோதனை நிலையிலேயே இருப்பதாகவும், ஏஐ காரணமாக ஊழியர்களை பணியில் சேர்ப்பதா அல்லது குறைப்பதா என்பதில் கூட தெளிவு இல்லை என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இதனால் பெரு நிறுவனங்கள் ஏஐ விவகாரத்தில் தெளிவு கிடைக்கும் வரை முக்கிய முடிவுகளை தள்ளி போடுவதாகவும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

    AIயால் சில வேலைகள் தேவையற்றதாக மாறினாலும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஏஐ மூலம் ஒரு வேலையை குறைந்த நேரத்தில் செய்ய முடிவதால்.. ஊழியர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கலாம். குறிப்பாக, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய சலிப்பான பணிகளை ஏஐ மேற்கொள்வதால் மனிதர்களின் வேலைகள் மேலும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாறக்கூடும் என்பதே அவரது கருத்தாகும்.

    Advertisement

    ஏஐ இன்ஜினியர்கள்

    ஏஐ வந்த பிறகு அதை இயக்க தேவையான ஏஐ இன்ஜினியர்கள் உள்ளிட்ட புதிய வேலைகள் உருவாகும். மேலும், ஏஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கும் புதிய பணியிடங்கள் உருவாகும். குறிப்பாக மருத்துவ துறையிலும் ஏஐ முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக, ஏஐ உதவியுடன் மிக விரைவாக சிக்கலான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திறனை பெற முடியும்.

    ஏஐ தொழில்நுட்பம் தொழில் தொடங்குவதற்கான செலவையும் குறைக்கலாம். இணையதளத்தை உருவாக்குவது, கணக்கு வழக்குகளை பார்ப்பது போன்ற பணிகளை ஏஐ மேற்கொள்ளும் நிலையில், குறைந்த ஊழியர்களுடன் புதிய நிறுவனங்களை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இப்படி ஏஐ காரணமாக பல்வேறு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

    Advertisement

    ஏஐ வேலையிழப்புகள்

    அதேநேரம் ஏஐ காரணமாக வேலையிழப்புகள் நிச்சயம் ஏற்படும் என்பதால் வேலைவாய்ப்பை பாதுகாப்பதற்கு அரசுகளும் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஏஐக்கு ஊழியர்களை போல ஊதியமோ அல்லது பிஎஃப் கணக்குகளோ இல்லை. எனவே, அதை பயன்படுத்தும்போது இந்த செலவுகள் மிச்சமாகும். எனவே, ஏஐ பயன்படுத்தும் நிறுவனங்களிடம், அதன் பயன்பாட்டை அடிப்படையாக வரியை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், ஊழியர்களை தொடர்ந்து தக்கவைக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் வழங்கலாம் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Former RBI Governor Raghuram Rajan has warned that AI-driven job displacement is inevitable(ஏஐ வேலையிழபு்புகள் குறித்து எச்சரிக்கும் ரகுராம் ராஜன்): Raghuram Rajan warns about raise of AI threat in job market.