டெல்லி: ''இந்திரா காந்தி வங்கதேச போரில் வெற்றி பெற்று பெரும் மக்கள் செல்வாக்கை பெற்றார். ஆனால் ஓரிரு வருடங்களின் ஆட்சிக்கு எதிராக மாபெரும் மனநிலை உருவானது. ஆனால் நரேந்திர மோடி, ஷா மற்றும் பாஜகவுக்கு எதிரான அலை மட்டும் இருப்பது இல்லை ஏன்? வாக்குரிமை முறையில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு அப்ரூவர் ஆக மாற வேண்டும்'' என்று ராகுல் காந்தி கூறினார்.
'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறைக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், 2 தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் சில விஷயங்களை செயல்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்ககட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதற்கிடையே தான் இந்திய தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரங்கள் பற்றி ராகுல் காந்தி டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: '' இந்திய தேர்தல்கள் திருடப்படுகிறது. இதை ஆதாரத்துடன் நான் நிரூபித்துள்ளேன். 2024 நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்கள் என்றும் அனைத்தும் முறைகேடாக நடத்தப்படுகின்றன. இதனை 100 சதவீதம் உறுதிப்படுத்துவதற்கு போதிய அளவில் தகவல்கள் உள்ளன. புத்திசாலித்தனமாக முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. ஞானேஷ் குமார் உடனடியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதோடு 'அப்ரூவர்' ஆக மாற வேண்டும். இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி செய்யும்போது அவர்களுக்கு எதிரான மனநிலை உருவாகும். இது அடிப்படை சக்தியாக இருக்கிறது. அது எந்தவொரு அரசாங்கத்துக்கும் எதிராக உள்ளது. யாரையும் விட்டு வைப்பது இல்லை. இந்திரா காந்தி வங்கதேச போரில் வெற்றி பெற்று பெரும் மக்கள் செல்வாக்கை பெற்றார். ஆனால் ஓரிரு வருடங்களின் ஆட்சிக்கு எதிராக மாபெரும் மனநிலை உருவானது. இது மாநிலம் அல்லது தேசிய என்று ஒவ்வொரு கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால் நரரேந்திர மோடிக்கும், ஷாவிற்கும் (அமித்ஷா), பாஜகவிற்கும் மட்டும் நடப்பது இல்லை. ஒரு நபரின் செல்வாக்கு, ஒரு அரசின் செயல்பாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆட்சிக்கு எதிரான மனநிலை எப்படி மறைந்து போகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிவது இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக ஹரியானாவில் ஆட்சி அதிகாரம் ஒரு கட்சியிடமிருந்து மற்றொரு கட்சிக்கு மாறி வந்துள்ளது. ஆனால் திடீரென ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி மறைந்து விடுகிறது. மகாராஷ்டிராவிலும் ஆட்சி அதிகாரம் மாறுகிறது. ஆனால் அங்கும் எதிர்ப்பு அலை மறைந்து விடுகிறது. உத்தர பிரதேசத்திலும் மாற்றம் நிகழ்ந்தது. சில சமயம் சமாஜ்வாதி, சில சமயம் பகுஜன் சமாஜ் என்று ஆட்சி மாற்றம் நடந்தது. இப்போது அங்கும் மாற்றம் இல்லை. மத்திய பிரதேசம், குஜராத் என எல்லா இடங்களிலும் அது ஆட்சி மாற்றம் மறைந்துவிடுகிறது. இது எங்களுக்கு ஒரு அடிப்படை கேள்வியாக உள்ளது. ஒரு தனிநபரின் செல்வாக்கையோ அல்லது ஒரு அரசாங்கத்தின் செயல்பாட்டையோ எங்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி எப்படி மறைந்துபோகிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. சதாம் உசேனின் ஈராக்கில் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி இருப்பதில்லை. வட கொரியாவிலும் அது இருப்பதில்லை. ஆனால், ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி இல்லாத எந்தவொரு ஜனநாயக நாடும் இந்த பூமியில் இல்லை. தேர்தல் ஆணையத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய வாக்களிப்பு முறையில் இரந்து தான் அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் பெறுகிறது. அரசியலமைப்பிலிருந்து சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. சட்டங்களிலிருந்து நமது நிறுவனங்கள் உருவாகின்றன. இது ஒரு சங்கிலித் தொடர். வாக்குரிமை அழிக்கப்பட்டால், நமது அரசியலமைப்பும் அழிக்கப்பட்டதாகிவிடும். அரசியலமைப்பு அழிக்கப்பட்டால், நமது சட்டங்கள் சட்டவிரோதமானவையாகிவிடும். சட்டங்கள் சட்டவிரோதமானவையாக இருந்தால், நமது நிறுவனங்கள் அர்த்தமற்றவையாகிவிடும். இங்குள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், இது வாக்குரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல. இது ஒவ்வொரு இந்தியனின் கருத்து, அடிப்படை கட்டமைப்பு மற்றும் அவர்களின் வெளிப்பாட்டு உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதலாகும். வாக்குரிமை முறையில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.