டெல்லி: ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகளில் இப்போது ஒரு புதிய பாணி தென்படுகிறது. காலையில் தொடங்கும் ஆலோசனைகள், சகோதரி பிரியங்கா காந்தியுடன் விவாதம், நம்பிக்கைக்குரிய தலைவர்களுடன் வீடியோ ஆலோசனை கூட்டம், எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஒருங்கிணைப்பு என திட்டமிட்டு செயல்படும் ராகுல், பிற்பகலில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகிறார். இதனால் மாலை டிவி விவாதங்களில், அவரது போராட்டங்கள் தேசிய அரசியலின் முக்கிய செய்தியாக மாறுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பு ஜூலை மாதம் நடைபெற்ற தர்ணா முதல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி அக்டோபரில் நடைபெற்ற தொடர் போராட்டங்கள் வரை அனைத்திலும் இந்த டைம் பேர்ட்டனை நம்மால் பார்க்க முடியும். தடுப்புகள், போலீசாருடன் மோதல், முழக்கங்கள், நீண்ட நேர தர்ணா என போராட்ட காட்சிகள் மாலை நேர செய்திகளிலும் சமூக வலைத்தளங்களிலும் டிரெண்டாகிறது.
ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் முதலில் சகோதரி பிரியங்கா காந்தியுடன் தான் கள அரசியல் குறித்து முதலில் விவாதிக்கிறாராம். இருவரும் அன்றைய அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கின்றனர். பிறகு ராகுல் தனது தனிப்பட்ட குழுவுடன் வீடியோ மூலம் ஆலோசனை நடத்துகிறார். அரசியல் மற்றும் போராட்ட வியூகம், ஒரு விஷயத்தை செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முறை உள்ளிட்ட விஷயங்கள் அதில் விவாதிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் ராகுல், இந்தியா கூட்டணியின் நிகழ்ச்சிகள் திட்டமிடப்படும்போது கூட்டணி கட்சி தலைவர்களையும் நேரடியாக தொடர்பு கொள்கிறார். முன்பு கூட்டணி கட்சிகளுடனான ஒருங்கிணைப்பை பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தான் அதிகம் கவனித்த நிலையில், இப்போது ராகுலே நேரடியாக களமிறங்கியிருப்பது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த திட்டமிடல் காலை 9 அல்லது 10 மணிக்கே தொடங்கிவிடுவதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர். தலைவர்கள், தொண்டர்கள் திரட்டப்படுவது தொடங்கி அனைத்து ஏற்பாடுகள் முடிக்கப்பட்ட பின்னரே ராகுல் போராட்டக் களத்துக்கு வருகிறார். முன்பு டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பெரும்பாலான போராட்டங்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒட்டியே நடைபெற்றன. பகலில் நாடாளுமன்ற வளாகத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டு, மாலைக்குள் அந்த செய்திகள் முக்கியத்துவத்தை இழந்துவிடும். ஆனால் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இளைஞர்கள் நடத்திய போராட்டங்களும், அவற்றுக்கு ராகுல் அளித்த ஆதரவும் இதில் மாற்றத்தை ஏற்படுத்தின. ஜூலை 20ம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறி, ஜூலை 21ம் தேதி ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியின் இல்லம் அருகே திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நீடித்த போராட்டத்தின் இறுதியில் அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 25ம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மாணவர்களின் போராட்டத்துக்கு இது வெற்றியாக அமைந்ததாக ராகுல் தெரிவித்தார். ஆகஸ்ட் 21ம் தேதி, போராட்டத்தில் காயமடைந்த மாணவர் சாஹில் லோச்சாப் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய கோரி, நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையம் முன்பு ராகுல் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்து போராட்டம் நடத்தினார். அடுத்து தேர்தல் ஆணைய விவகாரம். அக்டோபர் 6ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்களுடன் தேர்தல் ஆணையத்தை நோக்கி அவர் பேரணியாக சென்றார். போலீசார் தடுப்புகளை அமைத்ததால், ஆகாஷ்வாணி பவன் வளாகத்தில் நீண்ட நேரம் தர்ணா நடைபெற்றது. அக்டோபர் 12ம் தேதி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தை நோக்கியும் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தின. இவை அனைத்திலும் ராகுல் காந்தி தேசிய அளவில் கவனிக்கப்படும் தலைவராக உருவெடுத்தார். இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் கூறுகையில், "ராகுலின் போராட்ட நேரம் தற்செயலானது அல்ல. முன்பெல்லாம் காங்கிரஸ் ஆலோசனை கூட்டங்கள் இரவு 7 மணிக்கு தான் ஆரம்பிக்கும். இதனால் டிவியில் பிரைம் டைம் செய்திகளில் அவை எதுவுமே இடம் பெறாது. ஆனால், தற்போது மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலான பிரைம் டிவி விவாதங்களில் ராகுலின் போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால், காங்கிரஸ் முன்வைக்கும் பிரச்சினைகளைப் பிரதான ஊடகங்கள் விவாதிக்க வேண்டிய சூழல் உருவாகிறது" என்றார். மக்களிடம் முக்கிய பிரச்சினைகளை எடுத்து செல்வதில் காங்கிரஸுக்கு முன்பு சிக்கல் இருந்தது. அந்த சிக்கலை காங்கிரஸ் சரி செய்து கொண்டுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் டிவிக்களை விட சமூக வலைத்தளங்கள் வழியாக செய்திகளை பெறுகின்றனர். அவர்களுக்கும் கூட இந்த டைம் சரியாக ஒர்க் அவுட் ஆகிறது. முன்பெல்லாம் காங்கிரஸ் சார்பில் நடக்கும் கூட்டங்கள் கூட பெரியளவில் செய்திகள் ஆகாது. ஆனால், இப்போது ராகுல் மற்ற தலைவர்களை ஹோட்டலில் சந்திப்பது கூட முக்கிய செய்திகளாகிறது. சமூக வலைத்தளங்களிலும் இது டிரெண்டாகிறது. ஒருபுறம் தலைவர்கள் ஒன்றாக ஹோட்டலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின்றன; மறுபுறம் அவர்கள் போலீஸ் தடுப்புகளை எதிர்கொள்ளும் காட்சிகள் பரவுகின்றன. இதனால் அவரது செயல்பாடுகள் டிவி விவாதங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் டிரெண்டாகி வருகிறது. ராகுல் காந்தியின் அணுகுமுறையும் மாறியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். முன்பு அவசரமாக முடிவுகளை எடுப்பவராக சித்தரிக்கப்பட்ட அவர், இப்போது போராட்ட களத்தில் நீண்ட நேரம் இருப்பதும், போலீசாருடன் மோதல் ஏற்பட்டாலும் பின்வாங்காமல் இருப்பதும் அவருக்கு உறுதியான தலைவருக்கான பிம்பத்தை உருவாக்குகின்றன. நேரு குடும்பத்தை சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்திய அரசியலில் முக்கிய மைல்கற்களை எட்டியுள்ள நிலையில், ராகுலும் தனது அரசியல் அடையாளத்தை நிலைநாட்ட தீவிர முன்னெடுப்புகளை எடுக்க ஆரம்பித்துள்ளார். இருப்பினும், இந்த ஊடக கவனம் மட்டும் தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதமாகிவிடாது. போராட்டங்களில் திரளும் கூட்டத்தை மட்டும் வைத்து மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க ரெடியாகிவிட்டார்கள் என சொல்லிவிட முடியாது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, போராட்டங்களை தொடர்ந்து மக்களிடம் எடுத்து சென்று, அதை வாக்குகளாகவும் வெற்றியாகவும் மாற்றுவதே ராகுல் காந்திக்கு முன்னால் இருக்கும் உண்மையான சவால்!ராகுல் காந்தி
எல்லாம் மாறிடுச்சு
"நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.. பேரணியில் இணைந்த அனைவருக்கும் நன்றி" - ராகுல் காந்தி
போராட்டங்கள்
கவனிக்கப்படும் தலைவர்
டைம் லைன்
ஆட்சியே காலியாகிவிடும்.. இளைஞர்கள் போராட்டத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்? பாஜக அச்சம்?
பெரும் தலைவராக உருவெடுக்கும் ராகுல்