டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸின் திட்டம் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், "இது சிவபெருமானின் தாண்டவம். இதில் எந்தத் திட்டமிடலும் கிடையாது" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு மீதும் பல்வேறு புகார்களை முன்வைத்தார்.
சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. இன்று இந்தியா கூட்டணி சார்பில் மெகா பேரணி நடத்தப்பட்டது.
அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் மேலும், "நாங்கள் சும்மா போராடவில்லை. இந்திய மக்களின் மனதுக்காகவும் இதயத்துக்காகவும் போராடுகிறோம். ஜனநாயகத்தின் ஆணிவேரில் நடத்தப்படும் முறைகேடு ஆபத்தானது என்பதை மக்களிடம் எடுத்து சொல்கிறோம். இந்த விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுக்க நாம் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று என் சகோதரி கூறினார். ஆனால், அவர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்று நான் சொன்னேன். இது தாண்டவம்; சிவபெருமானின் நடனம். இதில் திட்டமிடல் எதுவும் இல்லை. இன்று உச்ச நீதிமன்றத்துக்கு செல்கிறோம். நாளை வேறொரு போராட்டத்தை நடத்துவோம். ஆகாஷ்வாணி பவனுக்கு சென்றபோதும் நாங்கள் முன்கூட்டியே திட்டமிடவில்லை. பேரணியாக சென்று அமர்ந்து, கைதாவது தான் முதலில் எங்கள் திட்டம். ஆனால் போலீசார் எங்களை செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் திட்டத்தை மாற்றினோம். இப்படி எங்கள் போராட்டத்திற்கு எந்த திட்டமும் தேவையில்லை. இந்த தாண்டவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிவபெருமானின் ஊர்வலத்தில் இணைய விரும்பும் எவரும் இணையலாம்" என்றார். கடந்த வாரம் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி தனது போராட்ட உத்தியை மாற்றினார். அதாவது டெல்லி போலீசார் பேரணிக்கு அனுமதி தராத நிலையில், டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி வளாகத்தில் நாள் முழுவதும் தர்ணாவை நடத்தினார். தனது பாரத் ஜோடோ யாத்திரையையும் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, அது மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இருந்ததாக கூறினார். அவர் மேலும், "பாரத் ஜோடோ யாத்திரையில் யாரும் மன்னராக இருக்கவில்லை. அனைவரும் ஒன்றாக நடந்தார்கள். இந்திய மக்கள் ஒருவரையொருவர் அரவணைத்து கொண்டார்கள். அதுவும் சிவபெருமானின் ஊர்வலமான தாண்டவம்தான். இந்தியர்கள் இப்படித்தான் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். திட்டமிட்டு அல்ல; இதயப்பூர்வமாக எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பு தொடர்கிறது; தொடர்ந்து கொண்டே இருக்கும்" என்று தெரிவித்தார். வெவ்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டங்கள் தனித்தனியானவை அல்ல என்றும் அவை அனைத்தும் ஒரே போராட்டத்தின் பகுதிகள் என்றும் ராகுல் காந்தி கூறினார். அவர் மேலும், "இவை எல்லாமே ஒரே போராட்டம். இந்தியா ஒன்றாக முன்னேறுகிறது. நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. அரசியலமைப்பை பாதுகாக்க நீங்கள் போராடினால், நாங்கள் உங்களுடன் இருப்போம்... உதவுவோம், ஆதரிப்போம், பாதுகாப்போம். அதே ஆதரவை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். இது இந்திய மக்கள் மீதான எங்களது அன்பின் வெளிப்பாடு. ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதன் பிறகு பிரதமர் மற்றும் அமித் ஷாவையும் நீக்க வேண்டும். நாங்கள் போராட்டத்தை நிறுத்த போவதில்லை" என்றார்.ராகுல் காந்தி
"தவறு செய்துவிட்டீர்கள்.. அப்ரூவராக மாறிவிடுங்கள் ஞானேஷ்.." திட்டவட்டமாக சொன்ன ராகுல் காந்தி
சிவ தாண்டவம்
மக்களை ஒன்றிணைப்போம்
"200 அரசு அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.." ராகுல் காந்தி சொன்ன பரபரப்பு தகவல்!
உதவுவோம்