டெல்லி: கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே தேர்தல் ஆணையம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம் இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் காரியா கமிட்டி கூட்டம் நடைபெற்ற நிலையில், அப்போது சீனியர் லீடர்கள் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி கடும் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக தனி ஆளாக குரல் கொடுத்து வருவதாகவும் ஆனால் கட்சிக்குள்ளேயே ஆதரவு இல்லை என கோபமடைந்துள்ளார்.
ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு, "கடல் கொந்தளிப்பாக இருக்கும்போது அதில் நீந்துவதை நான் விரும்புகிறேன். அதுவும் ஒருவித அமைதிதான்" என்று பதிவிட்டிருந்தார். அப்போது அவரது போஸ்ட்டிற்கான காரணம் புரியவில்லை என்றாலும் இப்போது அதன் அர்த்தம் ஓரளவுக்கு புரிய ஆரம்பித்து இருக்கிறது என்றே சொல்லலாம்.
அதாவது நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் மீது தனது அதிருப்தியை ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளார். அவர்களிடம் பல கேள்விகளை கேட்ட ராகுல் காந்தி, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வாக்கு திருட்டு விவகாரத்தை முன்வைத்து தான் இரண்டு ஆண்டுகளாக தனி ஆளாக போராடி வருவதாகவும் வேறு யாருமே இது தொடர்பாக பேசவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும், "கடந்த இரண்டு ஆண்டுகளாக வாக்கு திருட்டு குறித்து நான் பேசி வருகிறேன். ஆரம்பத்தில் நமது கட்சியை சேர்ந்தவர்களே நான் சொல்வதை நம்பவில்லை.. எனக்கு உடன்படவில்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பெரும்பாலானோர் இதை ஏற்று கொள்கிறார்கள்" என அப்சட் ஆகியுள்ளார். எஸ்ஐஆர். தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக சமீபத்தில் ரிப்போர்ட் வெளியானது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரை, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். தேர்தல் ஆணைய முடிவுகள் ஒருங்கிணைந்து எடுக்கப்பட வேண்டிய நிலையில், தங்களது ஒப்புதல் இல்லாமலேயே சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று கூடிய போதுதான், ராகுல் காந்தி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினர். கட்சிக்குள் இருக்கும் சில தலைவர்கள் வாக்கு திருட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைப்பதற்குப் பதிலாக மவுனமாகவே இருப்பதாக ராகுல் காந்தி கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் காலங்களிலாவது இதுபோன்ற விவகாரங்களை மக்களிடம் எடுத்து செல்ல தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், எஸ்ஐஆர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் நிலைப்பாட்டையே அனைத்து தலைவர்களும் எடுக்க வேண்டும் எனவும் இதில் மாற்றுக்கருத்து இருக்கக்கூடாது எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டதாக தெரிகிறது. அப்போது தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக நாடு முழுக்க மிக பெரிய போராட்டங்களை நடத்த வேண்டும் என்று சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பரிந்துரைத்ததாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதேநேரம் வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல் கருத்து சீனியர் தலைவர்கள் முழுமையாக உடன்படவில்லையாம். பல தலைவர்கள் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்தாலும், வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக பிரச்சினை கிளப்பினால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என சில சீனியர் தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.ராகுல் காந்தி
இரண்டு ஆண்டுகள்
ராகுல் கோபம்
சீனியர் தலைவர்கள்