ராகுல் காந்தி vs பிரியங்கா காந்தி.. காங்கிரஸில் வெடிக்கும் மோதல்? கொளுத்தி போட்ட பாஜக

  • டெல்லி: காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. பிரியங்காவின் மகன் ரேஹான் வதேராவின் புகைப்பட கண்காட்சியில் 74 போட்டோக்கள் அகற்றப்பட்ட விவகாரத்தில், ராகுல் காந்தி இதுவரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காததை சுட்டிக்காட்டி பாஜக இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

    Advertisement

    காங்கிரஸில் இப்போது மக்களிடையே அதிகம் செல்வாக்கு இருக்கும் இரு முக்கிய தலைவர்கள் என்றால் அது ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் தான். இதற்கிடையே பிரியங்கா காந்தி தனது மகனை அரசியலுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக இருப்பதாகவும் இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.

    Advertisement

    பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி இது குறித்து கூறுகையில், "பிரியங்கா காந்தி தனது மகனை அரசியலுக்குள் கொண்டு வருகிறார். இது தொடர்பாகவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது" என்றார்.

    பின்னணி

    பிரியங்கா காந்தியின் மகனான ரேஹான் வதேரா ஒரு புகைப்பட கலைஞர் ஆவர். டெல்லியில் மாணவர்கள் நடத்திய சமீபத்திய போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் இவர் எடுத்திருந்த போட்டோக்கள் டெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் 'No Idea is Final' என்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட இருந்தது. மொத்தம் 105 புகைப்படங்கள் அங்கு வைக்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் 74 போட்டோக்களுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக ரேஹான் தெரிவித்தார். கண்காட்சி தொடங்கியபோது 35 போட்டோக்கள் மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறினார்.

    Advertisement

    இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இளைஞர்களின் குரலை ஒடுக்குவதற்கான முயற்சி என்று பிரியங்கா விமர்சித்தார். இதற்கு பதிலளித்த பிகானேர் ஹவுஸ் நிர்வாகம், குறிப்பிட்ட போட்டோக்கள் கண்காட்சி நடக்கும் இடத்தின் கொள்கைகளுடன் பொருந்தவில்லை என்றும் இதன் காரணமாகவே நீக்கப்பட்டதாக விளக்கமளித்தது.

    விளக்கம்

    இதற்கிடையே பாஜகவும் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. ரேஹான் வதேரா முதலில் இயற்கை, வனவிலங்குகள், கலைப்படைப்புகள், சிற்பங்கள் குறித்த போட்டோக்களை காட்சிப்படுத்தவே அனுமதி கோரியிருந்ததாகவும் அதற்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டதாகவும் பாஜக கூறுகிறது. இது தொடர்பாக பிகானேர் ஹவுஸ் நிர்வாகத்துக்கு இடையிலான நடந்த இமெயில் போட்டோக்களையும் பாஜக பகிர்ந்துள்ளது.

    Advertisement

    பாஜக

    பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி இது தொடர்பாக மேலும் கூறுகையில், "ஜூன் 10ம் தேதி அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு ஜூன் 30-ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. முதலில் அனுமதி கோரிய போது அரசியல் போட்டோக்களுக்கு அனுமதி கோரவில்லை. அரசியல் சார்ந்த புகைப்படங்கள் பின்னர் சேர்த்துள்ளனர். இதன் காரணமாகவே கொள்கைகளுக்கு ஏற்ப இல்லாத 74 போட்டோக்களை அகற்றுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ரேஹானை அரசியலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டோக்களை சேர்த்துள்ளனர்" என்றார்.

    மோதல்

    பெர்சனல் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வியட்நாம் சென்ற ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தபோதும், ரேஹான் வதேரா விவகாரத்தில் வெளிப்படையாகப் பதிவிடவில்லை என்று பண்டாரி சுட்டிக்காட்டினார். இதை வைத்து, காங்கிரஸில் ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் இடையே அரசியல் முரண்பாடு இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.

    Advertisement

    ஆனால், இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களில் இருவரும் இணைந்து பங்கேற்றிருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    BJP has alleged differences between Rahul Gandhi and Priyanka Gandhi(ராகுல் காந்தி குறித்து பாஜக விமர்சனம்): Rahul Gandhi vs Priyanka Gandhi latest news in tamil.