டெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தும் என தெரிவித்தார். மோடி அரசுக்கு எதிராக மிக பெரிய போராட்டங்கள் நடக்கும் என குறிப்பிட்ட அவர், அதை முன்கூட்டியே சொன்னால் சர்ப்ரைஸ் இல்லாமல் போய்விடும் எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் தான் டெல்லியில் இதை வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் மிக பெரிய பேரணி நடந்தது. இதற்கிடையே இன்றைய தினம் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ராகுல் காந்தி இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த டீ மீட்டிற்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ஜந்தர் மந்தர் என்பது ஜனநாயக உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக இருந்தது. தற்போது அங்கு ஜனநாயக உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். இந்திய மக்கள் தங்களது குரலுக்காக போராடுவதை அரசால் அவ்வளவு எளிதாக தடுத்துவிட முடியாது. இதற்கு பின்னால் இருப்பவர்கள்.. குறிப்பாக இதை திட்டமிடும் பிரதமர் மோடி, இதை செயல்படுத்தும் அமித் ஷா, ஞானேஷ் குமார் உள்ளிட்டோர், தங்களுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பை சிதைத்துவிட்டு எளிதாக தப்பித்துவிட முடியாது. நாங்கள் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம். நேற்று நான் கூறியதைப் போல, இங்கு தனித்தனியாக போராட்டங்கள் நடைபெறவில்லை. ஒரே போராட்டம் தான் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதே அதன் ஒரே நோக்கம். இந்த நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் நடைமுறை சீர்குலைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு கிழித்து எறியப்பட்டுள்ளது. நாட்டில் உண்மையான ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுகிறோம். நேற்று எங்கள் போராட்டத்தில் அதுதான் வெளிப்பட்டது.. ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது இங்கு நிற்கும் அரசியல் கட்சிகளின் உணர்வு மட்டுமல்ல.. இந்திய மக்களின் உணர்வாகும். எங்களுக்கு ஆதரவாக நின்ற டெல்லி மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இது எங்களை பற்றிய போராட்டம் அல்ல; இந்திய மக்களை பற்றியது. அவர்களின் எதிர்காலத்தை பற்றியது. இந்திய மக்கள் மீது கொண்டுள்ள அன்பாலும் மரியாதையாலும், ஜனநாயக நடைமுறையை மீட்டெடுக்கும் வரை நாங்கள் இறுதிவரை போராடுவோம். ஜனநாயகத்தை அழித்த பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் என அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பது எங்களது உறுதி" என்றார். தொடர்ந்து போராட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, "நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடாமுயற்சியுடன் போராட்டம் நடத்துவோம் என்று சொன்னேன். நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. நாளையாக இருந்தாலும், அடுத்த நாளாக இருந்தாலும், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் ஆனாலும் எங்களது போராட்டம் தொடரும். இறுதி இலக்கை அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம். அந்த இலக்கை எப்படி அடைவோம் என்பதை இப்போது என்னால் கூற முடியாது. அதை முன்கூட்டியே சொன்னால் சர்ப்ரைஸ் இல்லாமல் போய்விடும். நாட்டுக்கும் மக்களுக்கும் அந்த எதிர்பார்ப்பை தக்கவைக்க விரும்புகிறோம். எவ்வளவு வலிமையுடனும் ஒற்றுமையுடனும் நாங்கள் ஒன்றிணைந்தோமோ, அதே உணர்வுடன் தொடர்ந்து போராடுவோம். உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இந்திய தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறை மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரத்தில் நீதித்துறைக்கு ஒரு பங்கு உள்ளது.. அந்தப் பங்கை அது நிறைவேற்றும் என நம்புகிறோம். ஆனால், நாங்கள் அரசியல் களத்தில் செயல்படுபவர்கள். எந்த அமைப்பு தலையிட்டாலும், தலையிடாவிட்டாலும் அரசியல் எதிர்ப்பும் மக்களின் எதிர்ப்பும் தொடர்ந்து இருக்கும். இறுதியில் அந்த எதிர்ப்பு வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.ராகுல் காந்தி
ஜனநாயகமே இல்லை
ஓய மாட்டோம்
மக்கள் போராட்டம் தொடரும்