டெல்லி: ''இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வகை 'இந்தியா' கூட்டணி போராடும். பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கினால் தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்'' என்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் இன்று 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பேரணி நடத்தினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் இருந்து திறந்த வாகனத்தில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ராம்லீலா மைதானத்துக்கு திறந்த வாகனத்தில் வந்தனர். அதன்பிறகு ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: ''பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பெண்கள், இளைஞர்கள், தலித் மக்களின் ஓட்டுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ள விரும்புகின்றனர். மோடி மக்களை பிரித்து அவர்களின் வாக்குகளை அபரிக்க முயல்கிறார். மக்கள் முடிவெடுப்பதற்கு பதில் வாக்காளர்களாக யார் வர வேண்டும்? என்பதை மோடியே தீர்மானிக்க நினைக்கிறார். மத்திய அரசும், மகாராஷ்டிரா, பீகார், உத்தர பிரதேச மாநில பாஜக அரசுகளும் வாக்குகளை திருடியே ஆட்சிக்கு வந்ததன. அவற்றை நாம் அகற்ற வேண்டும். நம் நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கினால் தான் முடியும். இதற்கு அனைவரின் ஆதரவையும் கோருகிறோம். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை 'இந்தியா' கூட்டணி போராடும். இந்த அதிகாரியை பதவியில் இருந்து விலக செய்வதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து வெளியே 'இந்தியா' கூட்டணி இழுத்து வரும். நாங்கள் காவல்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை அல்லது வேறு பிற அரசு அமைப்புகளை கண்டு பயப்படப்போவது இல்லை. எங்களிடம் போராடும் வலிமை உள்ளது. 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பயப்படமாட்டாரகள். இந்த மேடையில் உள்ளவர்கள் அனைவரும் போராட தயாராக உள்ளனர்'' என்றார். அதேபோல் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர், ''SIR நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. மேற்கு வங்கத்தில் எங்களின் தேர்தல் வெற்றியை பாஜக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வழியாக திருடிவிட்டது. இருப்பினும் சரணடையாமல் தொடர்ந்து போராடுவோம்'' என்றார்.