இடஒதுக்கீடு வேண்டாம்.. SC,ST வன்கொடுமை சட்டத்தை வாபஸ் வாங்கனுமாம்! வலதுசாரி மாணவர்கள் போராட்டம்

  • டெல்லி: சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டாம் என்றும், ஏழைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் வலதுசாரி மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

    Advertisement

    டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உயர் சாதியை சேர்ந்த மாணவர்கள் சிலர் திடீரென குவிந்து இடஒதுக்கீடுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் SC, ST வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும்.. அதை வாபஸ் பெற வேண்டும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    கடந்த சில தினங்களுக்கு முன்னர், நீட் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளை சரி செய்யக் கோரி கரப்பான் ஜனதா கட்சியின்(CJP) சார்பில் மாணவர்களும், இளைஞர்களும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில்.. அதேபோல தங்களுடைய போராட்டமும் கவனம் பெறும் என்று நினைத்து.. உயர் சாதி மாணவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக முழக்கமிட்டிருக்கின்றனர்.

    இடஒதுக்கீடு எ்னபது சாதியின் அடிப்படையில் இருக்கக்கூடாது. மாறாக.. ஒருவரின் பொருளாதார நிலையை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சாதிக்கு அல்ல.. ஏழைகளுக்கே இடஒதுக்கீடு என்று அவர்கள் கோஷம் போட்டிருக்கிறார்கள். சாதி பாகுபாடின்றி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    அதேபோல எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி.. அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். மேலும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு போராட்டக்காரர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி ஜந்தர் மந்தர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர்.

    Advertisement

    இருப்பினும் தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால்.. நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த போராட்டம் வலதுசாரி அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English Summary

    Right-wing student organizations are staging a protest at Delhi's Jantar Mantar, demanding that reservation not be based on caste and insisting that it be reserved solely for the poor.