டெல்லி: 52 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய தலைமையகத்தில் தேசிய கொடியை ஏற்றியது கிடையாது. ஆனால் நாங்கள் அப்படியில்லை.. தேசியைக் கொடியை ஏற்றுவோம்.. அதை எல்லா இடங்களிலும் பறக்க வைப்போம். இது எங்கள் நாடு என்று காக்ரோச் ஜனதா கட்சி (CJP) கூறியிருக்கிறது.
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் CJP பெரிய போராட்டத்திற்கு திட்டமிட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்களை குவித்த இந்த போராட்டத்தை மத்திய அரசு தடுத்தது. இருப்பினும் போராட்டம் நடத்த தொடர்ந்து முயன்றதால், CJP நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
இது CJP ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு தேர்தல் ஆணையர்களை கேட்காமல் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்து SIR நடவடிக்கையை அமல்படுத்தியிருக்கிறார். எனவே SIR-ஐ திரும்ப பெற வேண்டும். SIR என்பது கூட்டு நடவடிக்கை என்று நீதிமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவலை சொன்னதற்காக தலைமை தேர்தல் ஆணையர் கைது செய்யப்பட வேண்டும். இதுதான் CJP-ன் டிமாண்ட். ஆனால், மத்திய அரசு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே CJP அமைப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஒன்றாக களமிறங்கியிருக்கின்றன. டெல்லியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளின் தடுப்பை மீறி ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த போராட்டங்களுக்கு தலைமையேற்றதாக கூறி சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு CJP கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது மீண்டும் போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. CJP அமைப்புக்கு ஆதரவாக AISA, SFI, DYFI போன்ற இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகளும் போராட்டத்திற்கு ரெடியாகியுள்ளன. இந்த பின்னணியில்தான் CJP அமைப்பு, RSS குறித்து விமர்சித்திருக்கிறது. "ஆர்எஸ்எஸ் (RSS) 52 ஆண்டுகளாகத் தங்கள் தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றவில்லை! நாங்கள் அதை ஏற்றுவோம், எங்கும் பறக்கவிடுவோம்!
இது எங்கள் நாடு! எங்களைத் தாக்கலாம், சிறையில் அடைக்கலாம்.. ஆனாலும் நாங்கள் நிறுத்தமாட்டோம்!" என்று CJP தனது x பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.