SIR வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தேர்தல் ஆணையமே ஒப்புதலே தரவில்லையாம்? ஆர்டிஐ பதிலால் ஷாக்

  • டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தை உலுக்கி வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) விவகாரத்தில், நாட்டை அதிரவைக்கும் புதிய தகவல் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    Advertisement

    "நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து பணிகளைச் செய்தது. ஆனால், அப்படி ஒரு முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கவில்லை என்று ஆணையத்தின் தலைமைச் செயலாளரே எழுத்துப்பூர்வமாக பதில் தந்துள்ளார். அப்படியானால், ஆணையத்திற்கே தெரியாமல் இந்த உத்தரவைப் பிறப்பித்தது யார்? சஹேன்ஷாவா அல்லது அமித் ஷாவா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மிகக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தேர்தல் ஆணையம் அறிவித்த 'நாடு தழுவிய SIR'

    தேர்தல் ஆணையம் நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சரிபார்த்துத் திருத்துவதற்கான 'சிறப்பு தீவிர திருத்த' (SIR) நடவடிக்கையை அறிவித்தது. முதல் கட்டமாக பீகாரில் தொடங்கி, தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களாக மற்ற மாநிலங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கையின் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) கேட்ட கேள்வி என்ன?

    இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை அறிய, பிரபல சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜ் மற்றும் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் அதிகாரப்பூர்வ மனுக்களைத் தாக்கல் செய்தனர்,

    Advertisement

    "நாடு முழுவதும் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை (SIR) மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த கோப்புகள் மற்றும் உத்தரவு நகல்களை வழங்க வேண்டும்" என்பதே அந்த மனுவின் கோரிக்கை.

    மனுவுக்குத் தொடக்கத்தில் சரியான விளக்கம் கிடைக்காததால், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் முதல் மேல்முறையீட்டு அதிகாரியான தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளரிடம் சென்றது.

    தேர்தல் ஆணையம் அளித்த பதில் என்ன?

    மேல்முறையீட்டு அதிகாரியான தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் அளித்த அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ பதில் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது பதிலில்

    "நாடு தழுவிய அளவில் 2025-ல் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை தொடங்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை மனுதாரருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்."

    Advertisement

    இதன் பொருள் என்னவென்றால், நாடு முழுவதும் SIR நடைமுறையைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் எடுக்கவில்லை. அப்படி ஒரு முடிவை தேர்தல் ஆணையம் முறைப்படி அங்கீகரிக்கவே இல்லை; எனவே அதற்கான எந்தவொரு கோப்பும் ஆணையத்தின் பதிவேடுகளில் இல்லை!

    எழும் அடுக்கடுக்கான கேள்விகள்

    தேர்தல் ஆணையத்தின் இந்தப் பதில் பல அடிப்படை ஜனநாயகக் கேள்விகளை எழுப்பியுள்ளது:

    ஆணையமே முடிவெடுக்கவில்லை என்றால் உத்தரவிட்டது யார்?:

    ஒரு அமைப்பின் முதன்மை அதிகாரிகளான மூன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டாக அமர்ந்துதான் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். ஆணையமே அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால், நாடு முழுவதும் இவ்வளவு பெரிய திருத்தப் பணியைத் தொடங்க உத்தரவிட்டது யார்?

    Advertisement

    சட்டரீதியான உத்தரவு எங்கே?

    கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைத் தீர்மானிக்கும் ஒரு பெரும் பணிக்கு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கோப்பே இல்லை என்றால், எந்த சட்ட அதிகாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது?

    பவன் கேராவின் நேரடிக் குற்றச்சாட்டு:

    இந்த ஆவணங்களைச் சுட்டிக்காட்டியுள்ள பவன் கேரா, "தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவில்லை என்றால், இதனை இயக்கியது அரசாங்கத்தின் உச்சத்தில் இருக்கும் அதிகார மையங்களா? பிரதமர் நரேந்திர மோடியா அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவா?" என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆணையத்திற்குள் ஏற்கனவே வெடித்த மோதல்

    சில நாட்களுக்கு முன்புதான், தலைமைத் தேர்தல் ஆணையர் க்யானேஷ் குமாருக்கு எதிராக மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை ஆட்சேபனைக் குறிப்புகளை எழுதியுள்ளது அம்பலமானது. தங்களுக்குத் தெரியாமலேயே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், வாக்காளர் பட்டியல் சர்வர்கள் டெல்லியில் இருந்து தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

    Advertisement

    அந்தப் புயல் அடங்குவதற்குள், இப்போது "நாடு தழுவிய திருத்தப் பணிக்கே ஆணையத்தின் ஒப்புதல் இல்லை" என்ற அதிகாரப்பூர்வ RTI பதில் வெளியாகியிருப்பது, தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களை மேலும் ஆழமாக்கியுள்ளது.

    சாமானிய வாக்காளர்களுக்கு இது ஏன் முக்கியம்?

    ஒரு ஜனநாயக நாட்டில் குடிமக்களுக்கு இருக்கும் தலையாய அதிகாரம் வாக்குரிமை மட்டுமே. வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரம்மாண்ட நடவடிக்கைக்குப் பின்னால், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதலே இல்லை என்றால், அது ஜனநாயக நடைமுறைகளின் நம்பகத்தன்மையையே அசைத்துப் பார்க்கும் விஷயமாக மாறுகிறது.

    அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இப்போது ஒரே ஒரு பதிலைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.. ஆணையம் ஒப்புதல் தராமல், நாடு தழுவிய இந்த உத்தரவு யாரிடமிருந்து பிறப்பிக்கப்பட்டது?

    English Summary

    RTI Shocker on Nationwide SIR: Did Election Commission Even Approve Voter List Revision?