டெல்லி: உத்தர பிரதேச ராஜ்யசபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் மத்திய இணை அமைச்சர் பி.எல். வர்மா ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மோடி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பே மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கிடையே சமீப நாட்களாக இந்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாஜக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மோடி அமைச்சரவையில் உள்ள ஹர்தீப் சிங் பூரி மற்றும் பி.எல். வர்மா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஹர்தீப் சிங் பூரி மற்றும் பி.எல். வர்மா இருவரும் 2020 நவம்பரில் உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் 6 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே இருவரையும் மீண்டும் ராஜ்யசபா வேட்பாளர்களாக பாஜக அறிவிக்காதது கவனம் பெற்றுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75(5)-வது பிரிவின்படி, மத்திய அமைச்சர் ஒருவர் மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்க வேண்டும். பூரி மற்றும் வர்மா இருவரின் ராஜ்யசபா பதவிக்காலமும் நவம்பரில் நிறைவடைய உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் இருந்து அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் அடுத்த 6 மாதங்களில் வேறு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்வாகவில்லை என்றால் அமைச்சர் பதவியை இழப்பார்கள். ஆனால், அதற்கு முன்பே அமைச்சரவையில் மாற்றம் வரும் என்றே தெரிகிறது. ஹர்தீப் சிங் பூரி முதன்முதலில் 2018 ஜனவரியில் உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது மனோகர் பாரிக்கர் ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் தேர்வானார். பின்னர் 2020 நவம்பரில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 2024 ஜூன் மாதம் மூன்றாவது முறையாக மோடி அரசு பதவியேற்றபோது, ஹர்தீப் சிங் பூரிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. பி.எல். வர்மா 2020 நவம்பரில் உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வானார். பின்னர் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2024 ஜூனில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளில் இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த இருவரும் தான் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டது போல மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. தற்போது மத்திய அமைச்சரவையில் 12 இடங்கள் காலியாக உள்ளன. அதாவது அரசியலமைப்பு சட்டத்தின்படி, மத்திய அமைச்சரவையில் அதிகபட்சமாக 81 பேர் இடம்பெறலாம். ஆனால் தற்போது 69 பேர் மட்டுமே அமைச்சரவையில் உள்ளனர். உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் சாத்தியம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். பாஜகவின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறையின் அடிப்படையிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, சதீஷ் பூனியா, தருண் சுக் உள்ளிட்ட சில தலைவர்களுக்கு அரசு பொறுப்புகளுக்கு பதிலாக கட்சி அமைப்பு சார்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அமைச்சர்களின் செயல்பாடு மற்றும் வயது உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டும் மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. இந்த இருவரை தவிரவும் கூட கடந்த 6 மாதங்களில் 4 பேர் அமைச்சரவையில் இருந்து விலகி இருந்தனர். கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் காரணமாக தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். டெல்லி பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர், "ஒருவருக்கு ஒரு பதவி" நடைமுறை காரணமாக ஹர்ஷ் மல்ஹோத்ரா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதேபோல ரவ்நீத் சிங் பிட்டு, ஜார்ஜ் குரியன் ஆகியோரும் ராஜினாமா செய்திருந்தனர். மேலும், கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் என்டிஏ கூட்டணியில் திமுக இணையலாம் என்ற பேச்சும் தொடர்ந்து எழுந்து வருகிறது. மத்திய அமைச்சரவையிலும் திமுகவுக்கு வாய்ப்பு தரப்படும் என கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அதேநேரம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றே திமுக தரப்பு சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.மத்திய அமைச்சர்கள்
சட்டம் சொல்வது என்ன!
யார் அவர்கள்?
12 இடங்கள்
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற 3 லோக்சபா சபாநாயகர் தேர்தல்கள்.. என்ன நடந்தது? வென்றவர்கள் யார்?
நான் நெனச்சா polling-யே நிறுத்திவிடுவேன்! பார்க்குறீங்களா? திமுக கிளைச் செயலாளர் உதார்
மோடி அமைச்சரவையில் திமுக?