டெல்லி: வந்தே மாதரம் மசோதாவுக்கு மக்களவையில் திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் சாவர்க்கரும், வந்தே மாதரம் பாடலும்தான்" என திமுக எம்.பி ஆ.ராசா மக்களவையில் பேசியுள்ளார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வந்தே மாதரம் மசோதா நிறைவேறியது.
'வந்தே மாதரம்' தேசிய பாடலை வேண்டுமென்றே அவமதிப்பதை தடுக்க, தேசிய கவுரவத்தை அவமதித்தல் தடுப்பு திருத்த மசோதா- 2026 ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து லோக்சபாவில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை விவாதம் இன்றி நிறைவேற்ற திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரக்கோரி திமுக எம்.பி ஆ.ராசா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக லோக்சபாவிலும் நிறைவேறியது. இந்த மசோதாவின்படி, 'வந்தே மாதரம்' பாடலை வேண்டுமென்றே அவமதிப்பவர்களுக்கு அதிகபட்சம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். மக்களவையில் இன்று "வந்தே மாதரம்" மசோதாவில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்திய திமுக எம்.பி ஆ.ராசா, "இன்றைய நாள் நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான நாளாகும். நான் ஏன் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருகிறேன் என்றால்... இந்த மசோதாவின் நோக்கங்களையும் காரணங்களையும் நான் கவனமாகப் பார்த்தேன். இது ஒரு மோசடி மற்றும் ஏமாற்று வேலை தவிர வேறொன்றுமில்லை. ஜனவரி 24, 1950 அன்று நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபைக் கூட்டத்தில், அதன் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் குறிப்பிடுகையில், பக்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் இயற்றப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல் இந்திய விடுதலைப் போரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கு வகித்ததால், அது 'ஜன கண மன' தேசிய கீதத்திற்கு இணையான கவுரவத்தைப் பெறும் என கூறினார். நான் ஏற்கனவே இந்த மசோதா குறித்துப் பேசியுள்ளேன். இந்த நாட்டில் மத ரீதியான பிளவுகள் ஏற்பட ஒரு நபரும் ஒரு பாடலும் மிக முக்கியக் காரணம். ஏன் இந்தியா பிரிவினை கண்டது? ஒரு நபர் சாவர்க்கர், ஒரு பாடல் 'வந்தே மாதரம்' பாடல்" எனப் பேசினார் ஆ.ராசா.