டெல்லி: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த 20 எம்பிக்கள் பிரிந்து சென்றுவிட்டனர். அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கட்சி கேட்டிருந்தது. இந்த விஷயத்தில் சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்த நீதிமன்றம் கூறியிருக்கும் விஷயம் கவனம் பெற்றிருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற 20 அதிருப்தி எம்பிக்களை பதவி நீக்கம் செய்வது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வழக்கை விசாரித்தது.
இந்திய அரசியலமைப்பின்படி சபாநாயகருக்கு நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது என்பதை ஒப்புக்கொண்ட நீதிபதிகள், அதே நேரத்தில் கட்சி தாவல் தடை சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த விவகாரத்தில் சபாநாயகர் சீக்கிரமாக முடிவெடுப்பார் என்று நம்புகிறோம் எனக் கூறியுள்ளனர். டிஎம்சியிலிருந்து பிரிந்து சென்ற 20 கிளர்ச்சி எம்பிக்களை தகுதி நீக்க செய்ய கோரும் மனுக்கள் மீது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த 3 மாதங்களாக எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்து வருவது குறித்து நீதிமன்றம் தனது கவலையை பதிவு செய்திருக்கிறது. 3 மாத காலதாமதம் என்பதை ஒரு ரெட் அலர்ட் என்று வர்ணித்துள்ள உச்ச நீதிமன்றம், சபாநாயகருக்கு திட்டவட்டமான காலக்கெடு விதிக்க மறுத்துவிட்டாலும் வழக்கை தொடர்ந்து கண்காணிப்பதாக கூறியிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த கெய்ஷாம் மேகசந்திர சிங் தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கட்சி தாவல் மனுக்கள் மீது சபாநாயகர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கின்றனர். 20 எம்பிக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து பிரிந்தனர். அவர்கள் திரிபுராவை சேர்ந்த தேசிய குடிமக்கள் கட்சி என்ற கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் தங்களுக்கு தனி அங்கீகாரம் கோரினர். இப்படி ஒரு கட்சி இருப்பதே இந்த எம்பிக்கள் அக்கட்சியில் போய் சேர்ந்த பிறகு தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தெரிய வந்தது. அந்த வகையில் இந்த எம்பிக்களின் கட்சி தாவல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. டிஎம்சியில் இருந்து விட்டு, அக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது இன்னொரு கட்சியுடன் இணைவது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கத்திற்குரிய குற்றம் என்று கூறி டிஎம்சி எம்பி அபிஷேக் பானர்ஜி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடமும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நாங்கள் நியாயமாகத்தான் இன்னொரு கட்சியில் இணைந்தோம் என்று அதிருப்தி எம்பிக்கள் கூறுகின்றனர். இன்று உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சபாநாயகர் ஏற்கெனவே எம்பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்றும், நீதிமன்றம் சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கிடையில் பதிலளிக்க வழங்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகும், எம்பிக்கள் தங்களது பதிலை சமர்ப்பிக்க மேலும் 4 வார காலம் அவகாசம் கொடுத்துள்ளதாக கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அவர்கள் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பதிவு செய்து கொண்டு வழக்கை தள்ளி வைத்துள்ளது.