செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு விசாரணையிலிருந்து.. திடீரென விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி

  • டெல்லி:டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுகவைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி வி மோகனா விலகுவதாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    முந்தைய திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தார். இந்த சமயத்தில் டாஸ்மாக் மதுவிற்பனை, பார் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

    Advertisement

    கடந்த 28 ம் தேதி செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அவர் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் உள்பட 41 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அதோடு செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் என்று 7 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்பட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி கைதாகும் நிலை வந்தது.

    இதனால் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மதியம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த வழக்கு இன்று மதியம் 1 மணிக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி, நீதிபதி வி மோகனா அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நீதிபதி வி மோகனா, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு முன்பாக வி மோகனா மூத்த வழக்கறிஞராக இருந்தார். அந்த சமயத்தில் செந்தில் பாலாஜிக்காக பிற வழக்குகளில் வாதாடி உள்ளார். இதனால் அவர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணை அமர்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.

    Advertisement

    அதுமட்டுமின்றி தற்போது வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நீதிபதி வி மோகனா கோவையை சேர்ந்தவர். கடந்த மே மாதம் 27 ம் தேதி தான் வி மோகனாவின் பெயரை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலிஜியம் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்தது. இதையடுத்து மத்திய அரசு மே 31ம் தேதி அனுமதி வழங்கியது. வி மோகனா இதற்கு முன்பு எந்த நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்தது இல்லை.

    உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியானார். இதன்மூலம் அவர் புதிய பெருமையை பெற்றார். மூத்த வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியான 11வது நபர் என்ற பெருமையை அடைந்தார். அதோடு வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியானவ 2வது பெண் (முதலில் இந்து மல்ஹோத்ரா) என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The Tamil Nadu Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) has registered a case against former DMK Minister Senthil Balaji regarding irregularities in TASMAC. This case is scheduled to come up for hearing in the Supreme Court at 1:00 PM. Amidst this, Justice V. Mohana has announced her recusal from the proceedings.