இந்தியாவை விட்டே போறேன்.. என்னை கொன்றாலும் பரவாயில்லை.. வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

  • டெல்லி: வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறையால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நம் நாட்டில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா. இவருக்கு அந்த நாட்டு தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கூறிய வங்கதேசத்தின் கோரிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. இந்நிலையில் தான் 2 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று ஷேக் ஹசீனா, இந்தியாவை விட்டு வெளியேறி வங்கதேசம் செல்வதாகவும், அங்கு என்னை கொன்றாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

    Advertisement

    வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவர் நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் அவரது அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். இது வன்முறையானது.

    Advertisement

    2024 ஆகஸ்ட் 5ம் தேதி ஷேக் ஹசீனாவின் பிரதமர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முயன்றனர். இதுபற்றி அறிந்த ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரில் நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

    2024 ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 21 மாதங்களாக ஷேக் ஹசீனா நம் நாட்டிலேயே வசித்து வருகிறார். ரகசிய இடத்தில் அவர் தனது குடும்பத்தினருடன் உள்ளார். அவருக்கு மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது. இதற்கிடையே தான் கடந்த 2024ம் ஆண்டில் வங்கதேசத்தில் நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

    Advertisement

    கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பாயத்தில் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசீனா முற்றிலுமாக மறுத்த நிலையில் அவருக்கு மரண தண்டனை கிடைத்தது. இந்த தண்டனைக்கு முன்பும், பின்பும் தொடர்ந்து ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்த நாட்டு அரசு பலமுறை கோரிக்கை வைத்தது.

    ஆனால் ஷேக் ஹசீனாவின் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை காரணம் காட்டி மத்திய அரசு அவரை விடுவிக்கவில்லை. இந்நிலையில் தான் 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்துக்கு ஷேக் ஹசீனா தொலைபேசி வழியாக இண்டர்வியூ ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் இந்தியாவை விட்டு விரைவில் வெளியேறி வங்கதேசம் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி ஷேக் ஹசீனா கூறியுள்ளதாவது:

    Advertisement

    ''நானும், எனது அவாமி லீக் கட்சியை சேர்ந்த சீனியர் லீடர்களும் வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் செல்ல முடிவு செய்துள்ளோம். வங்கதேசம் சென்று நீதிமன்றத்தின் முன்பு சரணடைய உள்ளோம். அவர்கள் எங்களை கைது செய்யலாம். இல்லாவிட்டால் கொலை கூட செய்யலாம். இருப்பினும் நான் எனது சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அங்கு எனது கட்சி தொண்டர்களும், தலைவர்களும் கடும் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனக்கு மரணம் நேரிடுமானால் அது என் சொந்த மண்ணில் தான் நிகழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் அங்கு தான் நான் பிறந்து வளர்ந்தேன். என்னுடைய பெற்றோர் அங்கு தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு தான் அவர்கள் நாட்டுக்காக ரத்தம் சிந்தினார்கள்'' என உருக்கமாக கூறியுள்ளார்.

    Advertisement

    முன்னதாக ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்த பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டார். இவர் தலைமயைில் வங்கதேசம் ஒன்றரை ஆண்டுகள் வழிநடத்தப்பட்டது. அதன்பிறகு சமீபத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பிஎன்பி கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்று பிரதமராகி உள்ளார்.

    தாரிக் ரஹ்மான் கட்சியும், ஷேக் ஹசீனாவின் கட்சியும் தான் அங்கு பிரதான கட்சிகளாகும். முகமது யூனுஸ் மற்றும் தாரிக் ரஹ்மான் என 2 பேரின் அரசும் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தியாவில் இருந்து அவரை நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு கண்டுக்கொள்ளாத நிலையில் தற்போது ஷேக் ஹசீனாவே வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் திரும்புவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Sheikh Hasina sought refuge in India in August 2024 after resigning as Prime Minister amidst internal unrest in Bangladesh; a tribunal in that country has since sentenced her to death. The Central Government has not yet acceded to Bangladesh's request for her extradition. Amidst this situation, Sheikh Hasina has suddenly stated-after two years-that she intends to leave India and return to Bangladesh, declaring that she is willing to face death there.