டெல்லி: தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் எடுக்கப்படும் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக எழுந்துள்ள புகார்களுக்கு நடுவே இந்த விசாரணை நடைபெற்றது.. அப்போது தேர்தல் ஆணையத்தின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய நீதிமனறம் இரு வாரங்கள் அவகாசம் கொடுத்தது.
கடந்த சில வாரங்களாகவே தேர்தல் ஆணையம் மீது, குறிப்பாக தலைமை தேர்தல் ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார்.. பிற தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை கேட்கவில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டாகும்.
அதாவது 2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரை வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக குறைந்தது 14 முறை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் ஆட்சேபனைகளை தெரிவித்தாலும் அதை மீறி தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் என்பது மூன்று உறுப்பினர்களின் கூட்டு ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்துகின்றனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். இந்த விதி மீறப்பட்டுள்ளதால் ஞானேஷ் குமாரை தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து இடைக்காலமாக இடைநீக்கம் செய்யவும், இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 14 முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், 2025 ஜூன் - அக்டோபர் மற்றும் 2026 மே மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட மூன்று உத்தரவுகளும் மூன்று உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.. வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர் மேனகா குருசாமி, புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஆன்லைன் Form 6ல் முறைகேடு செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், இத்தகைய மாற்றங்களை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், "இந்த புகார் குறித்து நாங்கள் பரிசீலிப்போம்" என்று கூறினார். தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவில், மனுதாரர்கள் முன்வைத்த பல குற்றச்சாட்டுகள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மேனகா குருசாமி, இந்த விவகாரத்தில் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இதே விவகாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள பிற மனுக்களிலும் ஏற்கெனவே தாக்கல் செய்த பதில் மனுவை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. தேவைப்பட்டால், அந்த மனுக்களில் கூடுதல் பதில் மனுவையும் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்தது. தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு மறுப்பு தெரிவித்து கூடுதல் வாதங்களை முன்வைக்கத் தயாராக இருப்பதாக மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் தெரிவித்தார். இதற்காக ஒரு வாரம் அவகாசம் கோரிய அவர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் தகவல்களும் அதிகம் இருப்பதாக கூறினார். இதனை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, பதில் மனுவை தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கியது. மேலும் வழக்கு விசாரணையையும் நவம்பர் 17ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.புகார்
விசாரணை
நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
இரு வாரங்கள் டைம்