டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், நேற்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்றைய தினத்தை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம் என அறிவித்துள்ள காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளன. நேற்று முன்தினம் தேர்தல் அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய பேரணியின்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இரவு 10 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நேற்றும் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்களை டெல்லி ஜன்பத் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து மதிய உணவு விருந்து அளித்தார். இதன்படி அங்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் கூடினர். பின்னர் திடீரென ஜந்தர் மந்தருக்கு செல்வதாக தெரிவித்து தயாராக நிறுத்தப்பட்டு இருந்த பேருந்துகளில் ஏறினர். டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி இந்தியா கூட்டணி எம்பிக்கள் சென்ற நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பெண் போலீசார் சிலர் மயக்கம் அடைந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி ஐ.என்.ஏ. அருகில் உள்ள சத்திரசால் மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ராகுல் காந்தி கைதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்து இருந்தனர். ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கூறி வரும் நிலையில், அக்டோபர் 8 ஆம் தேதி இன்றைய தினத்தை 'இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம்' என காங்கிரஸ் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டார அளவில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துமாறு அனைத்து மாநில, மாவட்ட மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. எஸ்.ஐ.ஆர் தொடர்பாக போராடிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. விஜய்யின் தவெகவும் இதனை கண்டித்துள்ளது. ஜிகே வாசனும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, மக்களுக்கு சந்தேகம் வந்துள்ளதால் எஸ்.ஐ.ஆர் தொடர்பான நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார்.ராகுல் காந்தி கைது
ஜனநாயகத்தின் கருப்பு தினம்
நாடு முழுக்க இன்று காங்கிரஸ் போராட்டம்