ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்

  • டெல்லி: காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் ஆப்ஜித் தீப்கே அல்லது அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டால், 42 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று லடாக் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் அறிவித்துள்ளார்.

    Advertisement

    நீட் தேர்வு குளறுபடி, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வித்துறை தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடத்துகிறது.

    Advertisement

    இந்த நிலையில், தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், "ஜூன் 6-ம் தேதி நான் லடாக்கில் இருந்து டெல்லி வருகிறேன். ஜந்தர் மந்தரில் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். ஆனால் ஆப்ஜித் தீப்கே அல்லது போராட்டத்தில் பங்கேற்பவர்கள் கைது செய்யப்பட்டால், நான் உடனடியாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன். அந்த உண்ணாவிரதம் 42 நாட்கள் நீடிக்கும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்துள்ளார். போராட்டம் அமைதியான முறையில் நடைபெற டெல்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார். டெல்லி வந்த பின்னர் தனது எக்ஸ் பதிவில், "ஜந்தர் மந்தரில் உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒரு புத்தகத்தையும், நமது மூவர்ணக் கொடியையும் கொண்டு வர மறக்காதீர்கள்.

    Advertisement

    காவலர்களுக்கு அன்பு மற்றும் நன்றியின் அடையாளமாக மலர்களை வழங்குங்கள். இந்த இயக்கத்தை அன்புடனும் அமைதியுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்று ஆப்ஜித் தீப்கே தெரிவித்துள்ளார். போராட்டத்தை முன்னிட்டு ஜந்தர் மந்தர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், போராட்டத்தில் பங்கேற்கும் ஆதரவாளர்கள் தேசியக் கொடியும் ஒரு புத்தகமும் கொண்டு வர வேண்டும், சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு தண்ணீர், தொப்பி, சன்ஸ்கிரீன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English Summary

    Sonam Wangchuk: Ladakh-based climate activist Sonam Wangchuk has warned that he will begin a 42-day hunger strike if Cockroach Janata Party founder Abhijeet Dipke or its members are arrested during the Jantar Mantar protest over education-related issues.