தர்மேந்திர பிரதான் ராஜினாமா முக்கியமே இல்லை.. திடீரென டோனை மாற்றிய வாங்சுக்.. என்னாச்சு?

  • டெல்லி: தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே டெல்லியில் போராடும் இளைஞர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தே சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இருப்பினும், ராஜினாமாவுக்கு முன்பே வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டது சர்ச்சையானது. இதற்கிடையே சோனம் வாங்சுக் இது தொடர்பாக முக்கிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வித் துறையில் சீர்திருத்தம் கோரி 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நேற்று முன்தினம் இரவு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருந்த நிலையில், அது நிறைவேறும் முன்பே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

    Advertisement

    சோனம் வாங்சுக்

    இதற்கிடையே கோரிக்கை நிறைவேறும் முன்பே உண்ணாவிரதத்தை முடித்தது ஏன் என்பது தொடர்பாக வாங்சுக் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதே தனது முதன்மையான நோக்கமாக இருந்ததால் தான் உண்ணாவிரதத்தை முடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில், நீட் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் அவர் தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார். அதற்கு முன் மத்திய அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது, தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் கேள்வித்தாள் லீக் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம், நீட் தற்கொலை மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளித்தது.

    Advertisement

    விளக்கம்

    ஆனால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாத நிலையில் உண்ணாவிரதத்தை முடித்தது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் மருத்துவமனையில் இருந்து 24 நிமிடங்கள் கொண்ட விரிவான வீடியோ ஒன்றை சோனம் வாங்சுக் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "அமைச்சரின் ராஜினாமா முக்கியமான விஷயம்தான். ஆனால் பேச்சுவார்த்தையின் போது அதை நான் வலியுறுத்தவில்லை. ஏனெனில் மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதே என் முதல் கவலை.

    ராஜினாமா முக்கியமல்ல

    அமைச்சரை ராஜினாமா செய்ய வைப்பது என் தனிப்பட்ட பொறுப்பு அல்ல. மாணவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாமல் இருப்பதுதான் முக்கியம். அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதே எனது பிரதான நோக்கமாக இருந்தது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வது காலத்தின் கட்டாயம். அது நடந்தே தீரும். ராஜினாமா என்பது மத்திய அரசுக்கு மிகவும் சிறிய விஷயம். ஆனால் அதை செய்யாமல் இருப்பதால் நாடு முழுவதும் அவர்களின் நற்பெயர் பாதிக்கப்படுகிறது. மக்கள் கோபமாக உள்ளனர். எனவே சீக்கிரமே அந்த ராஜினாமா நடந்தே தீரும் என்பது எனக்குத் தெரியும். அதனால் அந்த கோரிக்கையை நான் அதிகமாக வலியுறுத்தவில்லை.

    Advertisement

    மேலும், மத்திய அரசுடன் எந்தவித ரகசிய உடன்பாடும் செய்யவில்லை. நான் ஏதோ மத்திய அரசுடன் டீல் போட்டுவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி டீல் போட நினைத்திருந்தால் 26 நாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமே இல்லை. டெல்லி வெயிலில் உண்ணாவிரதம் இருக்காமல், குளிர்சாதன அறையில் இருந்தபடியே பேசி முடித்திருக்கலாம்.

    மாணவர்கள் மீதான வழக்குகள்

    பேச்சுவார்த்தையின் போது ஆரம்பத்தில் மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது என்ற எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வழங்க மத்திய அரசு தயாராக இல்லை. வாய்மொழியாக மட்டுமே உறுதி அளித்தது. ஆனால், எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் வேண்டும் என்று நான் உறுதியாக வலியுறுத்தினேன். அதை வழங்க ஒப்புக்கொண்ட பிறகே உண்ணாவிரதத்தை முடித்தேன்.

    Advertisement

    டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு லடாக்கில் நடந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய கடுமையான நடவடிக்கை நினைவுக்கு வந்தது. அதுபோன்ற சம்பவம் டெல்லியிலும் நடைபெறக் கூடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. நான் உண்ணாவிரதத்தை முடித்து அமைதிக்காக அழைப்பு விடுத்தால் நிலைமை சுமுகமாகும் என்று நம்பினேன்.

    உண்ணாவிரதம் வாபஸ்

    எனது உண்ணாவிரதத்தை எம்பிக்கள், கரப்பான் பூச்சி கட்சி உறுப்பினர்கள் மற்றும் லடாக் பிரதிநிதிகள் முன்னிலையில் முடிக்க விரும்பினேன். ஆனால், மத்திய அமைச்சர்கள் வருகையால் சில பாதுகாப்பு கட்டுப்பாடுகளால் மற்றவர்கள் என்னை சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனால் தான் இரவு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன். இருப்பினும், மாணவர்களின் நலனுக்காக தொடங்கிய இந்தப் போராட்டம் தொடரும். தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர் இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தும்" என்றும் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Social activist Sonam Wangchuk has clarified why he ended his 26-day hunger strike(உண்ணாவிரத போராட்டம் குறித்து சோனம் வாங்சுக்): Sonam Wangchuk Neet protest latest news in tamil.