டெல்லி: தலைநகர் டெல்லியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமான கட்டத்திற்குப் போய் இருப்பதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் தொடர் போராட்டம் 12வது நாளை எட்டியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறை முறைகேடுகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த போராட்டத்தில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்த போராட்டம் இப்போது 5வது நாளை எட்டியுள்ளது. சோனம் வாங்சுக்கிற்கு அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஷ், சமூக ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோரும் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். நேர்மையான தேர்வு முறையை வலியுறுத்தி மாணவர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது என்று சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் நிதின் டிகே, சோனம் வாங்சுக்கின் ரத்த அழுத்தம் 110/70 ஆகவும், இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 77 ஆகவும், ஆக்ஸிஜன் அளவு 96 சதவீதமாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம் அவரது ரத்த சர்க்கரை அளவு (பிளட் குளுக்கோஸ்) மிக மோசமாக 61 முதல் 64 வரை குறைந்துள்ளது. வழக்கமாக உடலின் சர்க்கரை அளவு 100க்கு மேல் இருக்க வேண்டும் என்பதால்.. இந்தத் திடீர் வீழ்ச்சி மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சோனம் வாங்சுக் தனது உடல் எடையில் 2.4 கிலோவை இழந்துள்ளார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், நீர் மற்றும் உப்பை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட சோனம் வாங்சுக் மறுத்துள்ளார். தனது உடல்நலனை விட, தேர்வு குளறுபடிகளால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் இழப்பே தனக்கு வலியை ஏற்படுத்துவதாக வாங்சுக் வேதனை தெரிவித்துள்ளார். சோனம் வாங்சுக் மட்டுமின்றி, போராட்ட களத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற மாணவர்களின் உடல்நிலையும் வேகமாக நலிவடைந்து வருகிறது. ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் டேனிஷின் ரத்த சர்க்கரை அளவு 61 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல் அமீன் மற்றும் தீபக் ஆகிய மாணவர்களின் ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் ஆபத்தான நிலைக்குச் சென்றதால்... உண்ணாவிரதத்தை விட்டுவிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.. முன்னதாக, நிலைமை மோசமடைந்ததால் இனேஷ் என்ற மாணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக போராட்டக் களத்தில் பேசிய அஞ்சலி பரத்வாஜ், "கடந்த 2002 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 45 முக்கிய தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆகியிருக்கிறது. ஆனால், இதில் உரிய நடவடிக்கை இல்லை. 45 சம்பவங்கள் நடந்த போதிலும், வெறும் இரண்டு வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் மீதான பயம் இல்லாததே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது" என்று சாடினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஷ் வலியுறுத்தியுள்ளார். ஜந்தர் மந்தர் பகுதியில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் தடுப்புகளும் நமது நாட்டில் ஜனநாயகம் மோசமான நிலையில் இருப்பதையே காட்டுவதாக மூத்த ஆர்வலர் யோகேந்திர யாதவ் வேதனை தெரிவித்தார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்பது முதலில் ஆன்லைனில் நையாண்டியாகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அதற்கு இளைஞர்கள் ஆதரவு மிக அதிகமாக வந்தது. இதையடுத்து அவர்கள் கல்வித் துறையில் நடக்கும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி வில வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தை நடத்திய கரப்பான் பூச்சி கட்சியினர் இப்போது டெல்லியில் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.ஆர்வலர் சோனம்
ரத்த சர்க்கரை அளவு
மாணவர்கள்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி