டெல்லி: நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீப காலங்களாக நீட் உட்பட பல போட்டி தேர்வுகளில் குளறுபடிகள் நிலவுகிறது. இதனால் அப்பாவி மாணவர்கள் பல லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதில் சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது உண்ணாவிரத போராட்டம் இப்போது 21வது நாளை எட்டியுள்ளது. இதனால் அவரது உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற முற்றுகை பேரணிவரை தனது உண்ணாவிரதத்தை தொடரப்போவதாக சோனம் வாங்சுக் அறிவித்துள்ளார். சமீபத்தில் போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய சோனம் வாங்சுக், "ஜூலை 20 வரை உங்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் பங்கேற்க நான் நிச்சயம் உயிருடன் இருப்பேன். அந்த பேரணி வெற்றியடையவில்லை என்றால் நான் பேயாக திரும்பி வருவேன். என் உடல் பலவீனமாக இருக்கலாம். ஆனால் மனதளவில் நான் மிகவும் வலிமையாக இருக்கிறேன். ஜூலை 20-ஆம் தேதி அமைதியான முறையில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த வேண்டும். ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தில் நமது கோரிக்கையை எடுத்துச் செல்வோம்" என்றார். இதற்கிடையே அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதம் தொடங்கியதிலிருந்து சோனம் வாங்சுக் 9 கிலோவுக்கும் அதிகமாக உடல் எடை இழந்துள்ளார். தற்போது அவரது எடை 56.65 கிலோவாக குறைந்துள்ளது. ரத்த அழுத்தம் 105/61 mmHg ஆகவும், ரத்த சர்க்கரை அளவு 80 mg/dL ஆகவும் பதிவாகியுள்ளது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதே நிலை தொடர்ந்தால் அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழக்கும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றமும் இதில் தலையிட்டுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மத்திய அரசு தினசரி சோனம் வாங்குசுக்கிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்ற மத்திய அரசு, மருத்துவர் ஆலோசனைப்படி இதில் தலையிடுவோம் என்றும் குறிப்பிட்டது. கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பினரும் சோனம் வாங்சுக்கிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரை பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் டெல்லி ஜந்தர் மந்தருக்கு நேரில் சென்று சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் திங்கள்கிழமை டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்றே தெரிகிறது.சோனம் வாங்சுக்
பேயாக வருவேன்
உடல் உறுப்பு செயலிழக்கும் அபாயம்
சோனம் வாங்சுக்