உடல்நிலை மிக மோசம்.. ஆனாலும் 19வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்! சோனம் வாங்சுக் திட்டவட்டம்

  • டெல்லி: நீர் தேர்வு குளறுபடிகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 19வது நாளை எட்டியுள்ளது. இதில் அவரது உடல்நிலை மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பலரும் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

    Advertisement

    நீட் தொடங்கி பல்வேறு போட்டி தேர்வுகளிலும் தேர்வில் கடந்த சில காலமாகவே குளறுபடிகள் தொடர்கிறது. இதனால் பல லட்சம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் தான் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    சோனம் வாங்சுக்

    அவர்களுடன் 59 வயதான சோனம் வாங்சுக் இணைந்து காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளார்.. கடந்த மாதம் இறுதியில் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கிய நிலையில், அப்போது அது 19ஆவது நாளாக நீடிக்கிறது. இப்போது அவர் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதுடன், 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரதத்தை தொடங்கியதிலிருந்து வாங்சுக் சுமார் 8.9 கிலோ எடையை இழந்துள்ளார். தற்போது அவரது உடல் எடை 57.15 கிலோவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 400 கிராம் எடை குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    அவரது ரத்த அழுத்தம் 105/76 mmHg ஆகவும், ரத்த சர்க்கரை அளவு 80 mg/dL ஆகவும் சரிந்துள்ளது. ஆக்சிஜன் செறிவு 97 சதவீதமாக இருந்தாலும், உடல் ரீதியாக வாங்சுக் மிகவும் சோர்வடைந்துள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் மனதளவில் தெளிவாகவும் விழிப்புணர்வுடனும் இருப்பதாக கூறப்படுகிறது.

    மோசம்

    இது தொடர்பாக அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் நல்ல நிலையில் இல்லை. ஆனால் மிகவும் மோசமான நிலையிலும் இல்லை" என்கிறார். மேலும், தன்னிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுப்பதை விட, ஜூலை 20ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற முற்றுகை பேரணியில் மக்கள் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர், "என்னிடம் வந்து உண்ணாவிரதத்தை முடிக்க சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய அமைதி பேரணியில் கலந்து கொள்ளுங்கள்" என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Advertisement

    வாங்சுக் மட்டுமின்றி பல மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் அமைப்பைச் சேர்ந்த நேஹா, மணிஷ், ஆமீன் உள்ளிட்டோரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள். அவர்களது உடல்நிலையும் மோசமாகவே இருக்கிறது. உடல் எடையும் கணிசமாக குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கவலை

    இது ஒரு பக்கம் இருக்க.. சோனம் வாங்சுக் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கவலை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்பி சசி தரூர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தை முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். சினிமா பிரபலங்களும் கூட உண்ணாவிரதத்தைக் கைவிட கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    இதற்கு நடுவே அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் உயிரிழந்தால் அது நாட்டிற்கே அவமானம் என்றும் இதனால் அவருக்கு கட்டாயப்படுத்தி சிகிச்சை தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    பேரணி

    வரும் ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அப்போது பார்லிமெண்ட்டை நோக்கி பேரணி நடத்த கரப்பான் பூச்சி கட்சி திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அதை விட இப்போது சோனம் வாங்சுக்கின் உடல்நிலையே பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது..

    English Summary

    Activist Sonam Wangchuk has entered the 19th day of his indefinite hunger strike at Delhi Jantar Mantar(டெல்லியில் தொடரும் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்): Sonam Wangchuk Hunger Strike latest news in tamil.