டெல்லி: தனது கணவர் ராஜீவ் காந்தி பிரதமராவதை தான் கடுமையாக எதிர்த்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்துள்ள "Belonging: A Journey of Love" என்ற புத்தகத்தில் அவர் இந்த கருத்துகளை கூறியிருக்கிறார். மேலும், இந்த புத்தகம் வெளியாகும்போது அது பல்வேறு விவாதங்கள் கிளப்பும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் மூத்த அரசியல் தலைவரான சோனியா காந்தி, தனது வாழ்க்கை அனுபவங்களை தொகுத்து "Belonging: A Journey of Love" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் விரைவில் வெளியாகும் நிலையில், அது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய சோனியா காந்தி, "எனது கணவரை பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னபோது, நான் அதை முழுமையாக எதிர்த்தேன்" என்று கூறினார். தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இந்த புத்தகத்தை பயன்படுத்தியதாகவும் அவர் விளக்கினார். அவர் மேலும், "இந்த புத்தகத்தைப் படித்த பிறகு சிலர் என்னை பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ளலாம். சிலருக்கு என் மீதான எண்ணம் இன்னும் மோசமாகலாம். ஆனால், புத்தகம் எழுதும்போதும் பொது வாழ்க்கையில் இருக்கும்போதும் இதுபோன்ற விஷயங்கள் நடக்க தான் செய்யும். இந்த புத்தகம் வெளியாகும் போது, அது நிச்சயம் பேசுபொருளாகி விவாதம் ஆகும். அதை தவிர்க்க முடியாதது" என்று அவர் குறிப்பிட்டார். சோனியா காந்தியின் இந்த புத்தகம் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தாலியில் தனது குழந்தை பருவத்தில் தொடங்கும் இந்த புத்தகம், இந்திய அரசியலில் அவர் எதிர்கொண்ட அனுபவங்களையும் விவரிக்கிறது. இத்தாலியின் வெனெட்டோ பகுதியில் வளர்ந்த சோனியா காந்தி, 1965ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் ராஜீவ் காந்தியை சந்தித்தார். பிறகு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து விவரங்கள் மேலும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட அறிமுகம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தது, 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது, 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் என குடும்பத்தின் துயரமான தருணங்களையும் இந்த புத்தகம் பதிவு செய்கிறது. 2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றபோது, சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் பிரதமர் பதவியை ஏற்கவில்லை. இதையடுத்து மன்மோகன் சிங் பிரதமரானார். சோனியாவின் அரசியல் வாழ்க்கையில் இந்த முடிவு முக்கியமான திருப்பமாக அமைந்தது. முன்னதாக ஜாவியர் மோரோ எழுதிய "Red Sari" என்ற புத்தகத்திலும் ராஜீவ் காந்தி பிரதமராவதை சோனியா எதிர்த்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக ராஜீவ் பிரதமராக பதவியேற்பதைத் தடுக்க சோனியா கண்ணீருடன் முயன்றதாக அதில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 22ஆம் தேதி சோனியா காந்தி இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் தனது அதிகாரப்பூர்வ கணக்குகளை தொடங்கினார். இதுவரை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே பெரும்பாலும் தனது அறிக்கைகளையும் கடிதங்களையும் வெளியிட்டு வந்த அவர், தற்போது நேரடியாக சமூக வலைத்தளங்களில் தனது கணக்கை தொடங்கியுள்ளார்.கடுமையாக எதிர்த்தேன்
சோனியா காந்தி
பாவம் பண்ணிட்டாங்க.. இதெல்லாம் மன்னிக்கவே முடியாது! சோனியா காந்தி மீது அமித்ஷா அட்டாக்!
மிக முக்கிய சம்பவம்
ராஜீவ் காந்தி பிரதமர் ஆனதை துளியும் விரும்பாத சோனியா காந்தி.. அவரே பகிர்ந்த சீக்ரெட்
சோனியா காந்தி