டெல்லி: டெல்லியில் போராடும் மாணவர்களை எம்பிகள் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக, நாடாளுமன்ற மக்களவை ஒவ்வொரு அரை மணி நேரமாகத் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, இன்று பகல் முழுவதும் நாடாளுமன்றத்திற்குள் இணைய வசதியும், வாட்ஸ்அப் செயலியும் முடக்கப்பட்டது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி இருக்கும் நிலையில், அதைவிட பெரிய விவகாரமாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் நாடு முழுவதும் பேசும் பொருளாகி இருக்கிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் ஜந்தர் மந்திரில் போராட்டம் நடந்து வரும் நிலையில் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதை அடுத்து அவர்களை ஜந்தர் மந்தரிலேயே முடக்க திட்டமிட்ட காவல்துறை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இதில் போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தியதில் சிலர் காயமடைந்தனர். இதை அடுத்து டெல்லி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் மெட்ரோ உள்ளிட்ட ஐந்து ரயில் நிலையங்கள் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், போராடும் மாணவர்களை நாங்கள் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக, அவை ஒவ்வொரு அரை மணி நேரமாகத் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், NTA-வை ரத்து செய்ய வேண்டும், NEP 2020-ஐ திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகளான சிபிஎம், காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அந்தத் தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு எதிராக நாங்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று முழக்கமிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக அவை ஒத்திவைக்கப்பட்டால் குறைந்தது ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேலாக ஒத்திவைக்கப்படும். ஆனால் இன்று, வெளியில் போராடும் மாணவர்களை நாங்கள் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக, அவை ஒவ்வொரு அரை மணி நேரமாகத் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, இன்று பகல் முழுவதும் நாடாளுமன்றத்திற்குள் இணைய வசதியும், வாட்ஸ்அப் செயலியும் முடக்கப்பட்டது. அவை முடிந்து வெளியே வந்த பின்னரே, போராட்டத்தின் முழு வீச்சையும், போராடியவர்கள் மீது இந்த அரசு நடத்திய கொடிய தாக்குதலையும் எங்களால் அறிய முடிந்தது. அமைதியான ஜனநாயகப் போராட்டத்திற்கு, பாஜக அரசு தடியடி, தடுப்புகள் மற்றும் வன்முறை ஆகியவற்றைக் கொண்டே பதிலளித்துள்ளது. ஆனால், எத்தகைய அடக்குமுறையாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுப்பும் கேள்விகளை அழித்துவிட முடியாது!" என கூறியுள்ளார்.சு வெங்கடேசன்
தர்மேந்திர பிரதான்
மாணவர்கள் போராட்டம்
இணைய சேவை