இந்தியாவில் 55,000 பேர் உயிரிழப்பார்கள்.. சூப்பர் எல் நினோவால் அடுத்த 6 மாதங்களில் ஏற்படும் பாதிப்பு

  • டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இந்த ஆண்டு எல் நினோ வலுப்பெற்று வரும் நிலையில், அடுத்த 6 மாதங்களில் உலகம் முழுவதும் 3.73 லட்சத்துக்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழக்கக்கூடும் என்றும் காலநிலை தாக்க ஆய்வகம் கணித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் சுமார் 55,000 பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தாண்டு எல்நினோ காரணமாக உலகெங்கும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு உச்சக்கட்ட வெப்பம் பதிவாகி வரும் நிலையில், வேறு சில பகுதிகளில் மிக மோசமான கனமழை கொட்டி தீர்க்கிறது. இதுபோல தீவிர வானிலை நிகழ்வுகள் பல இடங்களில் ஏற்பட்டு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    Advertisement

    சூப்பர் எல் நினோ

    பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையை அடிப்படையாக கொண்ட எல் நினோ, உலகின் காற்று சுழற்சி, மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது இயற்கையான ஒரு காலநிலை நிகழ்வாகும். இந்த எல் நினோ காரணமாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள், பூமத்திய ரேகையை ஒட்டிய பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தைவிட 3.08 டிகிரி உயர்ந்துள்ளது.

    இதுவரை பதிவான எல் நினோ நிகழ்வுகளில் இது மிக அதிகமான வெப்பநிலை உயர்வாகும். இதை சில வல்லுநர்கள் 'சூப்பர் எல் நினோ' என்றும் அழைக்கின்றனர். இதற்கிடையே இந்த சூப்பர் எல்நினோ உலகில் ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாக El Nino Heat Mortality Tracker என்ற கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் எல் நினோ ஏற்படுத்தும் தீவிர வானிலை நிகழ்வுகளால் அடுத்த ஆறு மாதங்களில் உலகம் முழுவதும் 3,73,000க்கும் அதிகமான வெப்ப உயிரிழப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு பெரும்பாலும் வளரும் நாடுகளில் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியா உயிரிழப்புகள்

    இந்தியாவில் மட்டும் சுமார் 55,000 உயிரிழப்புகள் ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்தில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நைஜீரியாவில் சுமார் 56,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பாதிப்பு அதிகமாக இருக்குமாம். இந்தோனேசியாவில் சுமார் 29,000 பேரும், பிரேசிலில் 19,000 பேரும் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

    மும்பை

    எல் நினோவின் தாக்கத்தால் மும்பையில் காற்று மாசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர் குஃப்ரான் பெய்க் தெரிவித்துள்ளார். எல் நினோவால் காற்றின் வேகம் குறையும் நிலையில், அது மும்பை நகரில் காற்று மாசை அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

    Advertisement

    எச்சரிக்கை

    1950ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு உருவாகியுள்ள எல் நினோ தான் மிகவும் வலுவானதாக இருப்பதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இது வரும் டிசம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவுவதுடன், மழையின் அளவும் கூட மாறலாம்.

    இதனால் சில இடங்களில் வறட்சியும், வேறு சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது. எல் நினோவின் தாக்கம் 2027ம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் எல் நினோ, சுமார் 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.

    English Summary

    A forecast by the El Niño Heat Mortality Tracker warns that more than 373,000 people worldwide(சூப்பர் எல் நினோவால் மிக மோசமான பாதிப்பு): Super El Nino Warning latest news in tamil.