CBSE: சிபிஎஸ்இ 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மும்மொழி கொள்கையிலிருந்து விலக்கு - உச்சநீதிமன்றம் ஆணை!

  • டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போலவே, தற்போது 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், கட்டாய மும்மொழித் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே சலுகை மற்றும் நிம்மதியான கல்விச் சூழல் தற்போதைய 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், மும்மொழிக் கொள்கையை 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 2027 ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. தொடர்புடைய மாநில மொழி, ஆங்கிலம், மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி ஆகிய மூன்று மொழிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

    தேசிய கல்விக் கொள்கையின் இந்த அறிவிப்புக்கு ஏற்ப, நடப்பு கல்வி ஆண்டு முதலே 6 ஆம் வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. அடுத்த கல்வி ஆண்டில் 7 ஆம் வகுப்பு வரையிலும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு வரையிலும் என படிப்படியாக மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.

    Advertisement

    புதிதாக மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்தியதால் பாடப் புத்தகம் இல்லாதது உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சிபிஎஸ்இ-யின் மும்மொழி கொள்கையை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

    4 ஆம் வகுப்பிலிருந்தே ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற மொழிகளை பயின்று வரும் மாணவர்களை திடீரென சமஸ்கிருதம் உள்ளிட்ட வேறு மொழிகளுக்கு மாறும்படி கட்டாயப்படுத்துவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், அரசின் பிரமாணப் பத்திரத்தில் பாடப்புத்தகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவை இணையதளத்தில் மட்டுமே உள்ளதாகவும் மாணவர்களின் கைகளில் புத்தகங்களாக இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

    Advertisement

    மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், "நடப்பு கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நாடு முழுவதும் 28,819 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1.2 சதவீதம் பள்ளிகளை தவிர மற்றவை மும்மொழி கொள்கையை செயல்படுத்த தயாராகவே இருக்கின்றன" எனத் தெரிவித்தார். 6 ஆம் வகுப்பு மாணவர்கள் மிக விரைவில் இம்மாற்றத்திற்கு தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்றும் அவர் வாதிட்டார்.

    இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாணவர்களின் நுண்ணறிவில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நாங்கள் அவர்களை தொடர்ச்சியான சவால்களுக்கு உட்படுத்த விரும்பவில்லை. மாணவர்களுக்கு மன அழுத்தமற்ற கல்விச் சூழலே தேவை என்று குறிப்பிட்டனர்..

    Advertisement

    நீதிபதிகள் அமர்வு, "சிபிஎஸ்இ 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே விலக்கு 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தரப்படவேண்டும். மாணவர்களுக்கு சிரமத்தை தர விரும்பவில்லை. மாறாக அவர்களுக்கும் தேவையான வசதிகளை அளிக்க விரும்புகிறோம். 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய மும்மொழிக் கல்வியை வரும் 2027 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தலாம்" எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், விரிவான விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளுக்கு இணங்க, சிபிஎஸ்இ விரைவில் அதிகாரப்பூர்வ விதிமுறைகளையும் புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட வாய்ப்புள்ளது.

    English Summary

    Supreme Court asked the Centre and the CBSE to consider extending to the current Class 6 students the exemption from the three-language framework that has been granted to students of Class 7.