டெல்லி: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புக்கான நிரம்பாத 151 இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்ட நிலையில், காலியாக உள்ள 40 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான காலியிடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைத்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி பிஎஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணை செய்யப்பட்டது.
அப்போது, மருத்துவ அதிகாரிகள் சங்கம் தரப்பு, தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புக்கான நிரம்பாத 151 இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டது அந்த இடங்கள் முழுவதும் அகில இந்திய கவுன்சிலிங் முடிந்த பின்னரும் நிரம்பவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளதோ அதனை திரும்பவும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என முறையிட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தமிழகம் முதலில் 151 இடங்களையும் அதன் பின்பு இரண்டு இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கியது அதில் 113 இடங்களை நிரப்பி விட்டோம் என தெரிவித்தனர் அப்போது குறுக்கிட்ட மருத்துவ அதிகாரிகள் சங்கம், அப்படியெனில் அகில இந்திய தொகுப்புக்கு தமிழகத்தால் வழங்கப்பட்ட சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ இடங்களில் நிரம்பாமல் உள்ள 40 இனங்களை மொத்தமும் திரும்பவும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். அந்த இடங்களை தமிழகம் கவுன்சிலிங் நடத்தி நிரப்பும் வகையில் கட்-ஆப் மதிப்பெண்ணையும் குறைக்க வேண்டும். ஏற்கனவே கடந்த 2022 23 கல்வி ஆண்டில் கட் ஆப் சதவீதம் குறைக்கப்பட்டது. அவ்வாறு குறைக்கும் பட்சத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு கூடுதல் மருத்துவர் சேர்க்க முடியும் மேலும் , 111 மருத்துவர்கள் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்காக தமிழகத்தில் காத்திருக்கிறார்கள் என வாதிட்டனர். இதனையடுத்து இவ்வழக்கு தொடர்பாக உத்தரவிட்ட நீதிபதி பி்எஸ்.நரசிம்மா, தமிழகம் வழங்கியதில் நிரம்பாமல் உள்ள 40 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை கட் ஆப் சதவீதத்தை குறைத்து திரும்ப ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்புக்கு அறிவுறுத்தினர், மேலும், வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.