பாகப்பிரிவினை நடக்காவிட்டால்.. கணவர் சொத்தில் விதவை உரிமை இல்லையா? உச்சநீதிமன்றம் சொல்வது என்ன

  • டெல்லி: கணவர் இறந்த பிறகு அவரது சொத்தில் விதவை பெண்ணுக்கு உள்ள உரிமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. 1956ம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம் அமலுக்கு வந்தபோது, அந்த சொத்தில் முறையான பாகப்பிரிவினை நடந்திருக்கிறதா இல்லையா என்பதை பொருட்படுத்தாமல் மனைவிக்கே முழுமையான உரிமை இருப்பதாக என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    Advertisement

    கணவர் இறந்த பிறகு சொத்து யாருக்கு போகும் என்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்திருந்த கர்நாடக உயர்நீதிமன்றம், உயிரிழந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழுமையான உரிமை இருப்பதை ஏற்கனவே உறுதி செய்திருந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.வி. பட்டி மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்தது.

    Advertisement

    வழக்கு என்ன

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் 1949ம் ஆண்டு உயிரிழந்தார். அதாவது இந்து வாரிசுரிமை சட்டம், 1956 அமலுக்கு வருவதற்கு முன்பே அவரது கணவர் மரணமடைந்திருந்தார். அப்போது நடைமுறையில் இருந்த இந்து பெண்களின் சொத்துரிமை சட்டம் 1937ன் கீழ், கணவரின் சொத்தில் விதவைக்கு வரையறுக்கப்பட்ட உரிமை மட்டுமே வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த சொத்தில் பாகப்பிரிவினை கோரும் உரிமையும் அவருக்கு இருந்தது.

    பின்னர் 1956ம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம் அமலுக்கு வந்தது. அதில் பெண்களுக்கு இருந்த வரையறுக்கப்பட்ட சொத்துரிமையை முழுமையான உரிமையாக மாற்றியது. அந்த சொத்தை பெண் ஏற்கனவே வைத்திருந்தாலும் அல்லது பின்னர் பெற்றிருந்தாலும் இந்த விதி பொருந்தும். அதற்கு முறையான பாகப்பிரிவினை நடந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

    Advertisement

    கீழமை நீதிமன்றங்கள்

    இந்த வழக்கை முதலில் விசாரித்த ஜாம்கண்டி நீதிமன்றமும், முதல் மேல்முறையீட்டு நீதிமன்றமும் அந்த பெண்ணின் உரிமை கோரிக்கையை நிராகரித்திருந்தன. அவர் தனது கணவரின் சொத்தில் பாகப்பிரிவினை கோரி தனியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே அதற்கான காரணமாக கூறப்பட்டது. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த இரு நீதிமன்றங்களின் முடிவையும் மாற்றி, மனைவிக்கு முழுமையான உரிமை இருப்பதாகத் தீர்ப்பளித்தது.

    உயிரிழந்த கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனின் சட்ட வாரிசுகள், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. விதவையின் தரப்பில் வாய்மொழியாக பாகப்பிரிவினை நடந்ததாக கூறுவது நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அதனால் மட்டுமே அவருக்கு சட்டத்தின் கீழ் கிடைத்த உரிமை பாதிக்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.

    Advertisement

    உரிமையை மறுக்க முடியாது

    மேலும், ஒரு சொத்தில் முறையான பாகப்பிரிவினை நடைபெறாதது மட்டுமே அந்த சொத்தின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் பெண்ணின் உரிமையை மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. பிரிக்கப்படாத சொத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பங்கு காலப்போக்கில் மாறுபடலாம் என்றாலும் விதவைக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட உரிமையை மறுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

    உரிமை உண்டு

    அரசியலமைப்பு அமர்வுகள் இதற்கு முன்பு இதேபோன்ற வி. துளசம்மா (1977) மற்றும் ராகுபர் சிங் (1998) வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் விதவை பெண் ஒருவரின் முழுமையான சொத்துரிமைக்கு பாகப்பிரிவினை கட்டாயமான நிபந்தனை அல்ல என்ற கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English Summary

    Supreme Court has upheld a Karnataka High Court ruling affirming a widow’s full rights over her deceased husband’s property(இந்து வாரிசுரிமை சட்ட விளக்கம்): Widow Property Rights Under Hindu Succession Act.