டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் காரசார வாதங்கள் நடந்து வந்தபோது, திடீரென ஒரு கட்டத்தில் விசாரணையின் ஆடியோ-வீடியோ ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. விசாரணையின் பெரும்பகுதி லைவ் வீடியோ முடக்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் தான் மீண்டும் லைவ் வீடியோ கனெக்ட் ஆனது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது.
இப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்பி டோலா சென் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர் மேனகா குருசாமி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு புகார்களை நீதிமன்றத்தில் முன்வைத்தார். புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஆன்லைன் ஃபார்ம் 6ல் முறைகேடு செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், ஃபார்ம் 6-ல் இத்தகைய மாற்றங்களை செய்ய உச்ச நீதிமன்றமே அனுமதி அளித்ததாகக் கூறி தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "நாங்கள் இது குறித்து ஆய்வு செய்வோம்" என்றார். தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவிலேயே மனுதாரர்கள் எழுப்பிய பல குற்றச்சாட்டுகள் ஏற்று கொள்ளப்பட்டிருப்பதாக கூறிய வழக்கறிஞர் குருசாமி, ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார். விசாரணையின் மற்றொரு கட்டத்தில், மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா இந்த மனுக்களின் Maintainability குறித்த கேள்வியை எழுப்பினார். அவரது இந்த கருத்தை தொடர்ந்து நீதிமன்றம் விசாரணையின் ஆடியோ- வீடியோ ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது. அதன் பிறகு விசாரணையின் பெரும்பகுதி ஆடியோ- வீடியோ ஒளிபரப்பு இல்லாமலேயே நடந்துள்ளது. விசாரணை முடிவடையும் தருணத்தில் ஆடியோ-வீடியோ மீண்டும் கனெக்ட் ஆனது. அப்போது மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.எம். சிங்வி மற்றும் மேனகா குருசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர். அப்போது இந்த மனுக்கள் தொடர்பான பைல் நோட்டிங்ஸ் உள்ளிட்ட ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், "எங்களுக்கு எல்லாம் தெரியும்.. நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று மட்டும் கூறினர். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், குருசாமியின் வாதங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்கு மறுப்பு மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கோரினார். வழக்கில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் தகவல்களும் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்கு மறுப்பு தெரிவித்து மனுதாரர்கள் தங்கள் கூடுதல் வாதங்களை முன்வைக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிமன்றம், அடுத்த விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் ஒரு பக்கம் இருக்க.. இதை மக்களிடையே பெரிய விஷயமாக எடுத்து செல்லவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயன் வருகிறது. இதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நவம்பர் 1ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணி செல்லவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வழக்கு விசாரணை
ஆப் செய்யப்பட்ட வீடியோ
அது சீக்ரெட்! SIR நடத்த பயன்படுத்தப்பட்ட மென்பொருள் விவரங்கள் RTIல் கிடைக்காது- தேர்தல் ஆணையம்
கோரிக்கை
போராட்டங்கள்