இஸ்லாமியர்களின் பலதார திருமணத்துக்கு தடை போடும் மத்திய அரசு? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • டெல்லி: இஸ்லாமியர்கள் பல திருமணங்கள் செய்வதை முழுமையாக தடை செய்து, இந்த விவகாரத்தில் பெண்களுக்கு உரிய சட்ட பாதுகாப்புகளை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் பல தார திருமண சட்டத்துக்கு தடை விழுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    உச்சநீதிமன்றத்தில் மகளிர் உரிமை ஆர்வலர் ஜாகியா சோமன், டாக்டர் நூர்ஜஹான் சபியா நியாஸ் உள்பட பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், ''1937ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் பிரிவு 2ன்படி பலதார திருமணம் செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Advertisement

    ஏனென்றால் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 82 என்பது இஸ்லாமியர்கள் அல்லாத மற்றவர்களின் பலதார திருமணத்தை கிரிமினல் குற்றம் என்று சொல்வதோடு, 7 ஆண்டு வரையிலான சிறை தண்டனைக்கும் வாய்ப்பு வழங்குகிறது.

    மேலும் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள துனிசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பலதார திருமணம் ஒழிக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் இஸ்லாமியர்களின் பலதார திருமணத்தை தடுக்க வேண்டும். அது அரசிலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தால் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதரியான தண்டனைகள் வழங்கும் சட்ட நடைமுறையை கொண்டு வர வேண்டும் '' என்று மனுவில் கூறியிருந்தனர்.

    Advertisement

    இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்,நீதிபதி ஜாய்மால்யா பகாக்சி மற்றும் நீதிபதி வி மோகனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்லாமியர்களின் பல திருமணங்கள் செய்வதை முழுமையாக தடை செய்வது மற்றும் இந்த விவகாரத்தில் பெண்களுக்கு உரிய சட்ட பாததுகாப்புகளை வழங்குவது தொடர்பாக க மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

    இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் இந்த வழக்குகளுடன் இணைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் பலதார திருமணத்தை முழுமையாக தடை செய்ய மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    The Supreme Court has issued a notice seeking an explanation from the Central Government regarding a petition that calls for a complete ban on polygamy among Muslims and seeks appropriate legal protections for women in this matter. This has raised the question of whether the law permitting polygamy among Muslims might be banned.