அவர்கள் நக்சலைட்கள்.. வந்தே மாதரம் வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் சொன்ன வார்த்தை.. காரசார விவாதம்

  • டெல்லி: தேசிய பாடலான வந்தே மாதரத்தை பாடாமல் இருந்தால் சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'நக்சலைட்' என்று குறிப்பிட்டு மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கூறிய சில கருத்துகளாக நீதிமன்றத்திலேயே வார்த்தை மோதல் வெடித்தது. இந்த விவகாரத்தில் இப்போது மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    'வந்தே மாதரம்' பாடலை பாடுவதை வேண்டுமென்றே தடுப்பது அல்லது அந்த பாடலை பாடும் கூட்டத்துக்கு இடையூறு செய்வதை குற்றமாக்கும் 2026ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தை எதிர்த்து பாடகர் டி.எம். கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

    Advertisement

    இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றன. விசாரணையின்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பயன்படுத்திய "நக்சலைட்" என்ற வார்த்தைக்கு மூத்த வழக்கறிஞரும் ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான எஸ். முரளிதர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    என்ன சட்டத் திருத்தம்?

    1971ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Prevention of Insults to National Honour Act என்ற சட்டத்தில் 2026ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தையே டி.எம். கிருஷ்ணா எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். இந்த திருத்தத்தின்படி, தேசிய கீதம் அல்லது தேசிய பாடல் பாடப்படுவதை வேண்டுமென்றே தடுப்பது, அல்லது அவற்றைப் பாடும் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது குற்றமாகும். இதற்காக அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக "வந்தே மாதரம்" பாடலை பாடுவதை தடுப்பதும் குற்றமாக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கிருஷ்ணாவின் வாதம்

    இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவில், 'தேசிய பாடல்' என்றால் என்ன என்பது சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதர், "ஒரு சட்டத்தில் சிறை தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் இருக்கும்போது, அதில் பயன்படுத்தப்படும் முக்கிய சொற்களுக்குத் தெளிவான சட்ட வரையறை இருக்க வேண்டும்.

    அரசு ஏதேனும் அலுவலக குறிப்பாணை அல்லது நிர்வாக உத்தரவை வைத்து, சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படாத ஒரு விஷயத்துக்கு அதன் பிறகு பொருள் கொடுக்க முடியாது. முதலில் அரசு இதை தெளிவுபடுத்தட்டும். ஆனால் இந்த திருத்தத்தை எந்தவிதமான பரிசீலனையும் இல்லாமல் அவசரமாக கொண்டு வந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது" என்றார்.

    Advertisement

    நோட்டீஸ் வேண்டாம்

    இதற்கு நீதிபதிகள், "வரலாற்றைப் படிக்க யாராவது முயற்சி செய்தால், தேசிய பாடல் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்" என்று குறிப்பிட்டனர். அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டாம் என்று நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார். அப்படி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால் இந்த விவகாரம் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தும் என்று அவர் வாதிட்டார்.

    அப்போது முரளிதர், வரலாறு என்பதை மட்டும் வைத்து அரசியலமைப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க கூடாது கட்டுப்படுத்தும் ஒன்றாக இருக்க முடியாது என்று வாதிட்டார். அவர் மேலும், "வரலாறு என்பது அரசியலமைப்பு முடிவெடுப்பை கட்டுப்படுத்தாது. இதுபோன்ற விஷயங்கள் பொதுமக்களின் கருத்து உருவாகி, படிப்படியாக வளர வேண்டும். அதனால் தான், இந்த சட்டம் இயற்றப்பட்ட விதம் குறித்த கேள்வியையும் முன்வைக்கிறேன்" என்றார்.

    Advertisement

    நக்சலைட்டுகள்

    இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த முடிவை நாடாளுமன்றமே அரசியலமைப்புக்கு உட்பட்டு எடுத்துள்ளதாகக் கூறினார். அவர் மேலும், "இதனை விரும்பாதவர்கள் நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்போது இங்கே கொண்டு வருகிறார்கள். அரசியலமைப்பின்படி முடிவுகளை நாடாளுமன்றம் எடுக்கிறது. நக்சலைட்டுகள் முடிவெடுக்கும் விதத்தில் அல்ல" என்று அவர் கூறினார்.

    துஷார் மேத்தா சொன்ன நக்சலைட்கள் என்ற வார்த்தையே விவாதமாக மாறியது. துஷார் மேத்தாவின் இந்த வார்த்தையை முரளிதர் உடனடியாக எதிர்த்தார். அவர் மேலும், "எனது தரப்பு மனுதாரரை குறிப்பிட அவர் பயன்படுத்திய அந்த வார்த்தைக்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறேன். அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று முரளிதர் கூறினார்.

    Advertisement

    மோதல்

    அதற்கு துஷார் மேத்தா, முரளிதர் அரசியலமைப்புக்கு உட்பட்ட முடிவெடுக்கும் நடைமுறையையே கேள்விக்குள்ளாக்கியதால் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக விளக்கினார். ஆனால் முரளிதர் அதையும் ஏற்கவில்லை. வழக்கறிஞராக அதிலும் அரசு தலைமை வழக்கறிஞராக இருக்கும் ஒருவர் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை நான் இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை என வழக்கறிஞர் முரளிதர் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து அந்த வார்த்தையை பதிவு செய்யப்போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து துஷார் மேத்தா, "நான் மீண்டும் சொல்கிறேன். முடிவெடுப்பது நாடாளுமன்றம். அது தான் அரசியலமைப்பு சட்ட நடைமுறை. நக்சலைட் விரும்பும் விதத்தில் முடிவுகள் எடுக்கப்படாது.. இதை சொல்ல நான் வருத்தப்படவில்லை" என்று அவர் கூறினார். துஷார் மேத்தா மீண்டும் நக்சலைட் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் முரளிதர் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வேண்டும் என்றே துஷார் மேத்தா இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி வழக்கை திசை திருப்ப பார்ப்பதாக வழக்கறிஞர் முரளிதர் தெரிவித்தார். அதற்கு துஷார் மேத்தா, "நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. நான் ஒரு சித்தாந்தத்தைப் பற்றித்தான் பேசுகிறேன்" என்று விளக்கினார்.

    நோட்டீஸ் அனுப்பி உத்தரவு

    இந்த வாதங்களை எல்லாம் கேட்ட உச்ச நீதிமன்றம், தேசிய பாடலை பாடாத காரணத்திற்காக மட்டும் ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டினர். மேலும், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    English Summary

    Supreme Court heard singer T.M. Krishna’s challenge to the 2026 amendment criminalising deliberate obstruction of Vande Mataram(வந்தே மாதரம் வழக்கில் காரசார விவாதம்): Vande Mataram Law Challenge latest news in tamil.