விஜய்யை நான் புகழவில்லை.. செங்கோட்டையன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்

  • டெல்லி: ''தவெக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் முதலமைச்சர் விஜய்யை உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டுகிறார் என பேசியதை நீங்கள் பலரும் பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் அப்படி புகழவில்லை. இருப்பினும் தவெக அமைச்சரின் இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது'' என்று கூறி அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் அதிரடியாக அறிவித்தார்.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் செங்கோட்டையன். இவர் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சட்டசபை தொகுதியில் தவெகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    Advertisement

    இந்த தொகுதியில் அதிமுக சார்பில் பிரபு என்பவர் களமிறங்கி தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் அதிமுக வேட்பாளர் பிரபு சார்பில் செங்கோட்டையன் தேர்தல் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    தேர்தலில் செங்கோட்டையன் தாக்கல் செய்த வேட்புமனுவில் கையெழுத்திட்ட நோட்டரி வழக்கறிஞருக்கு உரிய அனுமதியில்லை. இதனால் வேட்புமனு சரியாக தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி இந்த வழக்கை தாக்கல் செய்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரங்களை மனுதாரர் பிரபு சமர்ப்பிக்கவில்லை என்று கூறி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதனை எதிர்த்து பிரபு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சஞ்சய் குமார் அறிவித்தார்.

    Advertisement

    இதுதொடர்பாக அவர், "இந்த வழக்கை வேறு அமர்வு முன்பு பட்டியலிடுவதற்காக பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் தவெக தொடர்பாக தான் புகழ்ந்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியாக இருக்காது.

    முன்பு தமிழ்நாடு தொடர்பான ஒரு குற்ற வழக்கை அரசு வழக்கறிஞர் ஒத்திவைக்க கோரினார். அப்போது சில கருத்துகளை கூறினேன். தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் என்ற ஒரு தகவல் கிடைத்ததாகவும், ஆனால் நீங்கள் ஏன் வழக்கை தொடர்ச்சியாக ஒத்தி வைக்க கோருகிறீர்கள் என்று தான் கேள்வி எழுப்பினேன்.

    Advertisement

    ஆனால் நான் தமிழக வெற்றி கழகத்தை புகழ்ந்தது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து கூட தமிழக வெற்றி கழகத்தை புகழ்ந்து பேசியதாக தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டது. உண்மையில் நான் கூறியது முற்றிலும் வேறுவிதமானது.

    முதல்வர் வேகமாக செயல்பட விரும்புகிறார் என்றால் நீங்கள் ஏன் மெதுவாக செயல்படுகிறீர்கள். வழக்கை ஏன் ஒத்திவைக்க கோருகிறீர்கள் என்ற பொருளில் நான் கூறியிருந்தேன். அது அப்படியே தவறாக தகவல் பரப்பப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை புகழ்ந்து பேசியதாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

    எனவே தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தஒருவரின் வழக்கை தான் விசாரித்தால் சரியாக இருக்காது என்பதால் தார்மீக அடிப்படையில் இந்த வழக்கில் இருந்து விலகுகிறேன். நான் அல்லாத வேறு ஒரு அமர்வில் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட இந்த மனுவை பட்டியலிட பரிந்துரை செய்கிறேன்'' என்றார்.

    English Summary

    Supreme Court Justice Sanjay Kumar, recusing himself from the hearing of the case challenging Minister Sengottaiyan's election victory and he says, "You may have seen many TVK ministers and political leaders claiming that a Supreme Court judge praised Chief Minister Vijay. However, I did not offer such praise. Nevertheless, it would not be appropriate for me to hear this case involving a TVK minister".