உபா வழக்கிலும் ஜாமீன் தரலாம்.. 98% பேர் விடுதலையாகும்போது ஏன் பல ஆண்டு சிறை? உச்ச நீதிமன்றம் கருத்து

  • டெல்லி: இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான கருத்தை உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. மனித உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கு ஆதரவாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது கடுமையான 'உபா' (UAPA) சட்டமாக இருந்தாலும் ஜாமீன் தான் பொதுவான விதி; சிறை என்பது விதிவிலக்கு தான் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    Advertisement

    போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாகக் கூறி, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்த சையத் இப்திகார் ஆண்ட்ராபி என்பவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அப்போது தான் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

    Advertisement

    உமர் காலித் வழக்கு

    கடந்த ஜனவரி 2026ல், உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தது. இன்றைய தீர்ப்பில், அந்தப் பழைய தீர்ப்பின் அணுகுமுறை குறித்தும் கருத்து கூறியுள்ளது. அந்தப் பழைய தீர்ப்பைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தங்களின் கடுமையான ஆட்சேபணையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    2021ம் ஆண்டு ஒரு வழக்கில், மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது. அதில், "UAPA சட்டமாக இருந்தாலும், ஒருவருக்கு வேகமான விசாரணைக்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அதன் மூலம் அவருக்கு ஜாமீன் வழங்கலாம்" எனக் கூறப்பட்டு இருந்தது.

    Advertisement

    நீதிபதிகள் கருத்து

    இந்த தீர்ப்பையும் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், "குறைந்த எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதிக எண்ணிக்கையிலான (பெரிய) அமர்வு வழங்கிய தீர்ப்பின் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டதே ஆகும். சந்தேகம் இருந்தால் அதை அதைவிடப் பெரிய அமர்வுக்குத் தான் அனுப்ப வேண்டுமே தவிர, ஒரு சிறிய அமர்வு, பெரிய அமர்வின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யவோ, புறக்கணிக்கவோ முடியாது!" என்றனர்.

    அதாவது கடந்த 2021ல் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்தாலும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் ஜாமீன் வழங்கலாம் என்று 3 நீதிபதி கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கி இருந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல் 2026ல் உமர் காலித்திற்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்பதற்கே இன்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

    Advertisement

    வெறும் 1% மட்டும்

    இந்தத் தீர்ப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கடந்த 5 ஆண்டுக்காலப் புள்ளிவிவரங்களையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய அளவில் UAPA வழக்குகளில் தண்டனை விகிதம் வெறும் 1.5% முதல் 4% வரை மட்டுமே இருக்கிறது. அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 94% முதல் 98% பேர் இறுதியில் விடுதலையாகிறார்கள்! ஜம்மு காஷ்மீரில் தண்டனை விகிதம் 1%-க்கும் குறைவு.. அதாவது, 99% பேர் இறுதியில் நிரபராதி என விடுவிக்கப்படுகிறார்கள்.

    தண்டனை வழங்க முடியாது

    "இறுதியில் 98% பேர் விடுதலையாகப் போகும் ஒரு வழக்கில், வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவரைப் பல ஆண்டுகள் சிறையில் அடைப்பது, விசாரணையின்றி அவருக்குத் தண்டனை வழங்குவதற்குச் சமம். குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்ற கொள்கையை இது சிதைத்துவிடும்" எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    English Summary

    Supreme Court ruling that "bail is the rule, jail is the exception" applies even under the stringent UAPA law(உபா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து): Supreme Court Landmark UAPA Ruling latest in tamil.