அக்.27 முதல் அனைத்து ரயில் டிக்கெட்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டாயம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் உள்ள கவுண்டர்களில் நேரடியாக விற்கப்படும் டிக்கெட்களில் பயணக் காப்பீட்டு வசதியும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    அட்கோபர் 27 ஆம் தேதிக்குள் இந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறினால், ரயில்வே வாரியமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எச்சரித்துள்ளது.

    Advertisement

    கட்ந்த 2023 ஜூன் மாதம் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. இந்தக் கோர ரயில் விபத்தில் 296 பேர் பலியாகினர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடே இந்தக் கோர விபத்துக்கு காரணம் என விமர்சிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கவாச் மோதல் தடுப்பு அமைப்பு செயல்படுத்தப்படாததோடு தொடர்புடைய அந்த விபத்து குறித்து விசாரணை ஆணையம் அமைக்கவும், ரயில் நெட்வொர்க் முழுவதும் கவாச் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தவும் கோரப்பட்டிருந்தது.

    நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் பயணிகள் விவகாரத்தை ரயில்வே அமைச்சகம் கையாண்ட விதம் குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

    Advertisement

    கவாச் விரிவாக்கம், நடை மேம்பாலங்கள் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும் என மீண்டும் மீண்டும் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் பெரும்பாலும் காகிதத்திலேயே முடங்கிவிட்டதாகவும், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகள் பெருமளவில் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்தது.

    முன்னதாக, கடந்த மே 11 அன்று, நேரடி டிக்கெட்டுகளுக்கு காப்பீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதில் உறுதியான முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில், நீதிபதிகள் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு உள்ள அதே நிபந்தனைகளின் பேரில், அக்டோபர் 27 முதல் கவுண்டர்களில் வழங்கப்படும் டிக்கெட்களுக்கும் காப்பீட்டைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளனர்.

    Advertisement

    அதன்படி, வரும் அக்டோபர் 27 முதல் நாடு முழுவதும் ரயில் நிலையக் கவுன்ட்டர்களில் நேரடியாக விற்பனை செய்யப்படும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளைப் போலவே கட்டாயமாகக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய சாமானியப் பயணிகளும் தங்களது பயணங்களின் போது தகுந்த காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், இந்த உத்தரவை முறையாகச் செயல்படுத்தத் தவறினால் ஏற்படும் விளைவுகளுக்கு ரயில்வே வாரியமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். அதோடு, வழக்கு விசாரணையை நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    English Summary

    Supreme Court has issued a mandatory directive that Train tickets sold across counters at every railway station nationwide must include travel insurance coverage identical to online bookings.