பரஸ்பர சம்மதத்துடன் நடந்த பாலியல் உறவை பலாத்காரம் என்று கூற முடியாது.. உச்ச நீதிமன்றம் கருத்து

  • டெல்லி: வயது வந்த இரு நபர்கள் பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துவிட்டு, பிறகு மனக்கசப்பு ஏற்பட்ட பிறகு அதனை பலாத்காரம் என்று கூற முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் விவரம் வருமாறு:-

    ரளாவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் மீது பெண் ஒருவர் பலாத்கார வழக்கு தொடுத்தார். அதில் கூறியதாவது:- "சந்தோஷ்குமார் தனது முதல் திருமணத்தை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்து கொண்டார். மைசூரில் திருமணம் நடந்த பிறகு 1996 ஆம் ஆண்டில் இருந்து 2003 ஆம் ஆண்டு வரை ஒன்றாக வசித்தோம்.

    அந்த சட்ட விரோத திருமணத்துக்கு பெற்ற சம்மதத்தை பயன்படுத்தி அவர் என்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். சட்டப்பூர்வ திருமணம் போல நம்ப வைத்து என்னுடன் குடும்பம் நடத்தினார். பலாத்காரம், ஏமாற்றுதல் , நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றங்களை செய்து உள்ளார்" என்று மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, சந்தோஷ்குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சந்தோஷ்குமார் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பிவி நாகரத்னா, ஆர். மகாதேவன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:- "சுமுக உறவு முறிந்தால் அது குற்றவியல் வழக்குகளாக மாற்றப்பட்டு வரும் போக்கு அதிகரித்து வருகிறது. பலாத்கார குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. ஆரம்பத்திலிருந்தே திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்தைப் பெற்றிருந்தால், அந்த வழக்கு வேறுபட்டதாக இருக்கும்.

    ஆனால், காதல் உறவு மோசமடைந்து முறிந்து போகிறது என்பதற்காக மட்டும், இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் நடைபெற்ற உறவை பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது. ஒருவர் விரும்பினால் காதல் உறவில் இருந்து விலகுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது.

    காதல் உறவை முறித்துக் கொண்டால் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்படலாம் என்ற அச்சத்தால் ஒருவர் விருப்பமின்றி அந்த உறவைத் தொடர வேண்டுமா? சுமுக உறவு நிலவும்போது, பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு நடக்கிறது. அந்த உறவு முறிந்து விட்டதற்காக, பின்னாளில் அதை பலாத்காரம் என்று முத்திரை குத்தக்கூடாது.

    திட்டமிட்டு ஏமாற்றி சம்மதம் பெறுவதையும், பரஸ்பர சம்மதத்துடன் நடந்த உறவையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்" என்று கூறியது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டது

    English Summary

    Supreme Court has stated that if two adults engage in a sexual relationship based on mutual consent, it cannot be classified as rape simply because a rift or bitterness arises between them later. The details of the case are as follows: