டெல்லி: ஜந்தர் மந்தரில் நடந்த நீட் போராட்டத்தில் போலீசார் மாணவர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தும்போது போலீசார் என்ன செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் போலீஸ் அத்துமீறல்கள் நடந்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, போராட்டங்களை கையாள போலீசாருக்கு புரோட்டோக்கால் வகுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கருத்து தெரிவித்தது.
மேலும், போராட்டத்தின் போது சட்டத்தை கையில் எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுதந்திரமான விசாரணை நடத்தி தவறு யார் மீது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும், "முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டத்தை கையில் எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்பை நிர்ணயிக்காமல் நடத்தப்படும் விசாரணைக்கு எந்த அர்த்தமும் இல்லை" என்று குறிப்பிட்டது. கடந்த ஜூலை 20ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது பதற்றம் ஏற்பட்டது. அப்போது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தினர். இதையடுத்து மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுடன், ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, "இந்த விவகாரத்தில் நீண்ட வாதங்கள் தேவையில்லை என்று கருதுகிறோம். இது மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டம். அவர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் சிலர் நுழைந்து, வேறு நோக்கத்திற்காக சூழலை மாற்ற முயல்வது வழக்கமாகிவிட்டது" என்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேலும், "போராட்டம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். அதை சரியாக கையாள புதிய முறை தேவை. மாணவர்கள் அரசியலமைப்பு சட்ட உரிமையை பயன்படுத்தியபோதும் இப்படி நடந்து கொண்டுள்ளனர். அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை வழங்க வேண்டும். முன்பு இந்த நீதிமன்றம் சில நடைமுறைகளை பரிந்துரைத்திருந்தாலும், தற்போது சூழல் மாறிவிட்டது. எப்போது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்த வேண்டும்.. அவற்றை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், போராட்டம் என்பது ஜனநாயகத்தின் ஓர் அங்கமாகும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசு மற்றும் டெல்லி அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. தேவையில்லாத நடவடிக்கையை யாரேனும் எடுத்திருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் இந்த சம்பவங்களில் 250க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்துள்ளனர். எனவே உண்மையை கண்டறிய முழுமையான விசாரணை அவசியம். பாதுகாப்புப் படையினரின் மன உறுதியையும் பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது வன்முறையில் மாணவர்கள் ஈடுபட்டதாக நான் நம்பவில்லை. சமூக விரோத சக்திகள் மாணவர்கள் கூட்டத்திற்குள் ஊடுருவியிருக்கலாம். கொலை, பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் தடுப்பு சட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் சிலர் போராட்டத்தில் கலந்து கொண்டதாக எங்களிடம் தகவல்கள் உள்ளன. அதற்கான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்" என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "அமைதியாக போராடிய மாணவர்களின் கூட்டத்திற்குள் சமூக விரோதிகள் புகுந்திருக்க வாய்ப்பு உள்ளது. நடந்த அனைத்தையும் மாணவர்களே செய்திருக்க வேண்டும் என்று கூற முடியாது" என்று குறிப்பிட்டார். இந்த வழக்கில் மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், போலீசார் தேவையில்லாத நடவடிக்கைகளை எடுத்த பல சம்பவங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், யூனிபார்ம் அணியாத போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.விசாரணை தேவை
என்ன நடந்தது
நிலைமை மாறிவிட்டது
போலீசார் காயம்
சமூக விரோதிகள்