என்ன தைரியம் உங்களுக்கு.. மாஜிஸ்திரேட் நோட்டீஸ் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தி!

  • டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் ரூ.5 லட்சம் பிணை வழங்க வேண்டும் என கிரேட்டர் நொய்டா நிர்வாக மாஜிஸ்திரேட் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஏற்கனவே தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நோட்டீஸ் எப்படி பிறப்பிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் ஜூன் 20ம் தேதி தொடங்கி 36 நாட்கள் நடைபெற்றது. நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, கரப்பான் பூச்சி கட்சி முன்வைத்த மற்ற கோரிக்கைகளையும் அரசு ஏற்று கொண்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. போராடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி

    இதற்கிடையே கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம புத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் அக்ஷத் திரிபாதி, டெல்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். இதையடுத்து அவரிடம் ரூ.5 லட்சம் கேட்டு ஜாமீன் நோட்டீஸை மாஜிஸ்திரேட் அனுப்பியதாக தெரிகிறது. இந்த நோட்டீஸ் பின்னர் போலீசாரால் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், இது சர்ச்சையாக வெடித்தது.

    போராட்டத்தில் பங்கேற்றதுடன், பல்கலைக்கழக மாணவர்களையும் போராட்டத்தில் பங்கேற்குமாறு அக்ஷத் திரிபாதி ஊக்குவித்ததாக போலீசார் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் வாய்மொழியாக முன்வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விசாரித்தது.

    Advertisement

    காட்டம்

    அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், மாணவர்களுக்கு எதிராக எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டினார். அவர் மேலும், "ஒரு மாஜிஸ்திரேட் எப்படி நோட்டீஸ் அனுப்பினார்? எந்த மாணவர் மீதும் கட்டாய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். அந்த உத்தரவை எந்த மாஜிஸ்திரேட்டும் மீற முடியாது" என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    இப்படியொரு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு ஆச்சரியத்தை தருவதாக குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, "இளைஞர்கள் மீது தேவையற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெளிவாக கூறியுள்ளோம். அதையும் தாண்டி நடவடிக்கை எடுத்தால் என்ன அர்த்தம்" என கேள்வி எழுப்பினார். இந்த அமர்வில் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

    Advertisement

    நோட்டீஸ்

    கடந்த செப்டம்பர் 4ம் தேதி கிரேட்டர் நொய்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அக்ஷத் திரிபாதி பல்கலைக்கழக மாணவர்களிடையே அரசுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பி, அவர்களை தூண்டிவிட்டதாக போலீசார் குற்றம்சாட்டியிருந்தனர். அவரது நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக மோதல் ஏற்பட்டு அமைதி மற்றும் பொது ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    விளக்கம்

    இதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க போதுமான காரணங்கள் இருப்பதாக மாஜிஸ்திரேட் கூறியிருந்தார். மேலும், அமைதியை பேணுவதற்காக ரூ.5 லட்சம் தனிநபர் ஜாமீன் கேட்டு ஏன் உத்தரவிடக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு அக்ஷத் திரிபாதியிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அக்ஷத் திரிபாதி மறுத்துள்ளார். தான் போராட்டத்தில் அமைதியான முறையிலேயே பங்கேற்றதாகவும், அந்த நேரத்தில் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Supreme Court has expressed strong displeasure over a ₹5 lakh bail notice issued to a student who participated in the Cockroach Janata Party protest(கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்): Cockroach Janata Party Protest latest news in tamil.