வனப்பகுதியை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது.. மேகமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சொன்ன பாயிண்டு

  • டெல்லி: மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் முடிந்துள்ள நிலையில், தீர்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக அங்கு வசிப்போரை எப்படி அகற்ற முடியும் என்பது தமிழக அரசு வாதமாக இருக்கும் நிலையில், வனப்பகுதியில் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    Advertisement

    மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்றைய தினம் இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் எஸ்.வி.என். பாட்டி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    மேகமலை விவகாரம்

    விசாரணையின்போது, மாஞ்சோலை மற்றும் மேகமலை பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கே.எம் நடராஜ், மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    இதற்கு நீதிபதிகள், "வனப்பகுதி என அறிவிக்கப்பட்ட இடத்தில் எப்படி நெடுஞ்சாலை அமைக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினர். முதலில் மாஞ்சோலை, மேகமலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான விவகாரத்தை விரிவாக விசாரித்த பிறகே நெடுஞ்சாலை திட்டம் குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Advertisement

    இலவம்பஞ்சு தோட்டம்

    பிற்பகலில் மீண்டும் விசாரணை நடைபெற்றபோது, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த அறிக்கை இலவம்பஞ்சு தோட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்டால் அது வனப்பகுதிதான் என்றும், அங்கு இலவம்பஞ்சு தோட்டம் அமைப்பதை அரசு ஏன் ஊக்குவிக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.

    மேலும், இலவம்பஞ்சு சாகுபடியால் அங்கு ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வெளியிலிருந்து வந்து வணிக நோக்கத்துக்காக வனப்பகுதியை ஆக்கிரமிப்பதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கு தமிழக அரசு தரப்பில், இலவம்பஞ்சு தோட்டங்களை அமைத்துள்ளவர்கள் அந்தப் பகுதியிலேயே வசித்து வரும் மக்கள் என்றும், வெளியிலிருந்து வந்தவர்கள் தோட்டங்களை அமைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    பட்டா

    சமீப காலத்தில் யாருக்கும் அரசு பட்டா வழங்கவில்லை என்றும் 1982ம் ஆண்டில்தான் கடைசியாக பட்டா வழங்கப்பட்டதாகவும் அரசு தரப்பு கூறியது. பட்டா வைத்திருப்பவர்களின் நிலத்தை அகற்ற முயன்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும், இந்த வழக்கு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போதும் அப்பகுதியில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பரமேஸ்வர், "மேகமலை 1978ம் ஆண்டிலேயே ரிசர்வ் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு பலர் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்தாலும், அவர்களை பழங்குடியினர் அல்லது வனத்தை சார்ந்து வாழும் மக்கள் என வரையறுக்க முடியாது" என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    கேள்வி

    அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வன உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே அங்கு வசித்து வந்தவர்களை எப்படி அகற்ற முடியும் என்று கேட்டார். மேலும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு தங்களது தரப்பை முன்வைக்க போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    சுமார் 5,000 ஹெக்டேர் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டால் சுமார் 5,300 குடும்பங்கள் பாதிக்கப்படும் கூறப்படும் நிலையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

    English Summary

    Supreme Court has reserved its verdict case seeking removal of alleged encroachments in the Meghamalai(மேகமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வாதம்): Meghamalai Forest Encroachment Case latest news in tamil.