டெல்லி: கைது செய்யப்பட்டவர்களை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்படுபவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என காவல்துறையினர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில், தடுப்பு காவலுக்கும் இந்த விதி பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டாலும், கைது செய்யப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை அந்த நொடியிலிருந்து பறிபோகிறது. எனவே தடுப்பு காவலில் வைக்கப்பட்டவரை, அதிகாரப்பூர்வமாக கைது செய்தால் அதன் பின்னர் 24 மணி நேரம் என்கிற விதி பொருந்தாது. தடுப்பு காவலில் எடுக்கப்பட்ட நொடியிலிருந்தே 24 மணி நேர கெடு தொடங்கிவிடும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
தடுப்பு காவலுக்கும், சட்ட ரீதியான கைது நடவடிக்கைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக சில உயர்நீதிமன்றங்கள் கருதுவதாக குறிப்பிட்டிருக்கும் உச்சநீதிமன்றம், அதனை விமர்சித்திருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. கைது மற்றும் காவலில் வைத்தல் ஆகிய இரண்டுக்கும் இடையே, காவல்துறை காட்டும் செயற்கையான வேறுபாடு அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடி ஆகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 24 மணி நேர கணக்கு என்பது, முறைப்படியான கைது நடவடிக்கையில் இருந்து தான் தொடங்கும் என்ற வாதம்.. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 22 (2) மற்றும் பிஎன்எஸ்எஸ் பிரிவு 56 ஆகியவற்றுக்கு எதிரானது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். ஒருவரை பிடித்து வைத்து, அவரை முறைப்படி கைது செய்வதற்கு முன்பாக.. காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது தேடுதல் வேட்டைக்கான நேரத்தை, இந்த 24 மணி நேரத்திற்குள் இருந்து கழிக்க அரசியலமைப்பு சட்டப்பிரிவு 22(2) அனுமதிக்கவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கும் ஒரே விதிவிலக்கு, குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்த இடத்திலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கான தேவைப்படும் பயண நேரம் மட்டும்தான் என்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர். தற்காலிகமாக, ஒருவரை குறுகிய நேரத்தில் பிடித்து வைப்பது கைது ஆகாது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்ததுடன், குடிமகனின் அடிப்படை உரிமையை தற்காலிகமாக கூட இடை நிறுத்தம் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவில், 'கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும்' என்ற வாக்கியம் இணைந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கைது மற்றும் காவலில் வைத்தல் வார்த்தைகள் ஒரே அர்த்தம் கொண்டவை. கைதிலிருந்து பிரிக்கப்பட்ட எந்த ஒரு காவலையும் அரசியலமைப்பு ஏற்பதில்லை என்று நீதிபதிகள் தெளிவாக கூறியிருக்கின்றனர். காவல் வன்முறைகளை தடுப்பதற்கு, முறையான நீதித்துறை மேற்பார்வை மிகவும் அவசியமாகிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 1. ஒரு நபரின் சுதந்திரம் எப்போது பறிக்கப்படுகிறதோ.. அந்த தேதி மற்றும் நேரத்தில் இருந்து தான் 24 மணி நேர கணக்கு தொடங்குமே தவிர, முறைப்படியான கைகளில் இருந்து அல்ல. 2. ஒரு நபர் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக, அவரது காவல் 24 மணி நேரத்தை தாண்டினால்.. அவர் உடனடியாக காவல் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும். 3. பயண நேரத்தை தவிர வேறு எந்த நேரத்தையும், 24 மணி நேர பிரிவில் இருந்து கழிக்க முடியாது என்று நீதிபதிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். காவல்துறையை பொறுத்தவரை விசாரணைக்காக அழைத்துவரப்பட்டு, கைது செய்யப்படாமல் அவரரை விடுவிப்பது என்பது நார்மலாக பின்பற்றப்படும் விசாரணை முறையாக உள்ளது. இப்படி இருக்கைளில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, காவல்துறையின் கடுமையான நடவடிக்கைக்கு கடிவாளம் போடுவதை போல உள்ளது. தமிழ்நாடு காவல்துறை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பின்பற்றுகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.