சும்மா வீட்ல இருக்காங்கன்னு சொல்லாதீங்க! இல்லத்தரசிகளின் உழைப்புக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு! சூப்பர்!

  • டெல்லி: வீட்டைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது என தினமும் ஓய்வில்லாமல் உழைக்கும் இல்லத்தரசிகளின் பணிக்கு பொருளாதார மதிப்பு அளிக்கப்பட வேண்டுமா என்ற விவாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

    Advertisement

    சாலை விபத்தில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டை கணக்கிடும்போது, அவர்கள் வீட்டில் செய்த பணிகளின் மதிப்பை மாதம் குறைந்தபட்சம் ரூ.30,000 எனக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    மேலும், இல்லத்தரசிகள் வெறும் குடும்பப் பொறுப்புகளை மேற்கொள்பவர்கள் மட்டுமல்ல, "தேசத்தை உருவாக்குபவர்கள்" என்ற அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்கள் என்றும் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற இல்லத்தரசி, 2001-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் தொடர்ந்த இந்த வழக்கு பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகே இறுதி கட்ட விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது 20 ஆண்டுகால தாமதம் குறித்தும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. சாலை விபத்து இழப்பீட்டு வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருக்கக் கூடாது என்றும், இயன்றவரை ஓராண்டுக்குள் விசாரணையை முடித்து இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    Advertisement

    இதுவரை பல வழக்குகளில், இல்லத்தரசிகளின் வருமானத்தை கணக்கிடும்போது திறன்மிக்க தொழிலாளர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் அந்த அணுகுமுறை, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குடும்ப நிர்வாகப் பணிகளின் உண்மையான பொருளாதார மதிப்பை பிரதிபலிக்கவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

    இந்த தீர்ப்பில், வீட்டை நிர்வகிப்பது என்பது சாதாரண பணியாக கருத முடியாது என்றும், குடும்பத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் இல்லத்தரசிகள் ஆற்றும் பங்களிப்பு அளவிட முடியாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் செய்யும் பணிகளுக்கு நேரடி ஊதியம் வழங்கப்படவில்லை என்பதற்காக, அந்த உழைப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இல்லத்தரசிகளின் பங்களிப்பு குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் கருத்து தெரிவித்துள்ளது. குடும்பத்தில் அவர்கள் மேற்கொள்ளும் சமையல், குழந்தை பராமரிப்பு, முதியோர் கவனிப்பு, வீட்டு நிர்வாகம் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்த தீர்ப்பின் மூலம், இல்லத்தரசிகளின் உழைப்புக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலும் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக சாலை விபத்து இழப்பீட்டு வழக்குகளில், குடும்பத் தலைவிகளின் உழைப்பை பண மதிப்பில் கணக்கிட்டு இழப்பீடு வழங்கும் நடைமுறைக்கு இந்த தீர்ப்பு முக்கிய வழிகாட்டுதலாக அமையும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். நீண்ட காலமாக பொருளாதார மதிப்பீட்டில் புறக்கணிக்கப்பட்டு வந்த இல்லத்தரசிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வந்துள்ள இந்த தீர்ப்பு, பெண்களின் உழைப்புக்கு சமூக அங்கீகாரத்தையும், சட்ட ரீதியான முக்கியத்துவத்தையும் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Supreme Court says homemakers’ household work must be valued at ₹30,000 monthly in accident compensation cases.