இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

  • டெல்லி: பாலியல் தொழில் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பான சட்டங்களை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தோரைக் கைது செய்யவோ அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ போலீசாருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

    உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் செய்வது முழுக்க முழுக்க தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அதேநேரம் சில ஐரோப்பிய நாடுகளில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. இந்தியாவில் பாலியல் தொழில் தொடர்பான சட்டங்களில் நீண்டகாலமாக குழப்பங்கள் இருந்தது. இந்தக் குழப்பங்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது மிக முக்கியமான ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.

    உச்ச நீதிமன்றம்

    அதாவது வயது வந்தவர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, போலீசாருக்கும் சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. சுமார் 70 ஆண்டுகள் பழமையான ITPA சட்டத்தை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

    பாலியல் தொழில்

    நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தச் சட்டத்தின் கீழ் வயது வந்தவர்கள் தானாக முன்வந்து செய்யும் பாலியல் தொழிலைத் தடுக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. நீதிபதிகள் மேலும், "பாலியல் தொழில் நடைபெறும் இடங்களில் நடத்தப்படும் சோதனைகளின் போது, அங்கு விருப்பப்பட்டுத் தங்கியிருக்கும் பெண்களைக் காவல்துறை துன்புறுத்தக்கூடாது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவோ அல்லது அவர்களைக் கட்டாயப்படுத்திக் காவலில் வைக்கவோ சட்டத்தில் இடமில்லை. விடுதி நடத்துவது மட்டுமே சட்டப்படி குற்றமாகும்" என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    மேலும் நீதிபதிகள், சுய விருப்பத்தின் பேரில் இந்த வேலையைச் செய்யும் பெண்களை மீட்பு என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கக்கூடாது. காவல்துறையினர் இத்தகைய சூழல்களில் மிகவும் கண்ணியத்துடனும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் நடக்க வேண்டும்" என்றனர்.

    மறுவாழ்வு

    பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்துப் பேசிய நீதிபதிகள், எந்தவொரு பெண்ணையும் அவரது விருப்பத்திற்கு மாறாக மறுவாழ்வு மையங்களில் அடைக்க முடியாது என்று கூறினர். அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், மாற்று வாழ்வாதாரத்திற்கான வழிகளையும் உருவாக்கித் தர வேண்டும். ஆனால், அந்த மறுவாழ்வுச் செயல்முறை என்பது அவர்களின் சம்மதத்துடனேயே நடக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி, ஒருவருக்கு மறுவாழ்வு அளிப்பது அரசின் கடமையாகும். ஆனால், அதை ஒரு நபர் மீது திணிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இந்தத் தொழிலில் இருப்பவர்கள் தாங்களாக முன்வந்து உதவி கோரினால் மட்டுமே அரசு தலையிட முடியும் என்றனர்..

    போலீஸ் ரெய்டு

    மேலும், ரெய்டு நடத்தும் போலீசாருக்கும் சில முக்கியமான அறிவுறுத்தல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அது தொடர்பாக மேலும், "சோதனைகளின் போது பாலியல் தொழிலாளர்களைக் காவல்துறையினர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது. அவர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாதவரை, அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். குறிப்பாக, வயது வந்தவர்கள் தங்களின் தனிப்பட்ட முடிவின்படி செயல்படும்போது, அதில் தலையிடக் காவல்துறைக்கு எந்த உரிமையும் இல்லை" என்பதை நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

    English Summary

    Supreme Court rules that voluntary sex work by adults is not illegal under the ITPA(விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெரியவர்களை காவல்துறை துன்புறுத்தக்கூடாது உச்ச நீதிமன்றம்): Supreme Court Verdict on Voluntary Sex Work latest news in tamil.