இடைத்தேர்தல் தடை.. விஜய் எடுக்கப்போகும் ‘மேஜர்’ முடிவு.. உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

  • டெல்லி: திருச்சி கிழக்கு, விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மனுதாரர் வெங்கடாஜலபதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எல்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர், கரூர் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில், இவர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது எனக் கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைத்தேர்தல் நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்று வாதிட்டார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் 1967 முதல் 2018 வரை பல தீர்ப்புகளை வழங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

    Advertisement

    இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் இன்னும் கிடைக்காததால் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாது என கூறப்பட்டது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.

    முதல்வர் விஜய் தரப்பில், மனுதாரர் அந்தத் தொகுதிகளின் வாக்காளர் அல்ல என்றும், இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான முடிவு தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குட்பட்டது என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய் மற்றும் தொடர்புடைய எம்.எல்.ஏ.க்கள் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    Advertisement

    அதுவரை, இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மனுதாரர் வெங்கடாஜலபதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    English Summary

    With an interim stay currently in effect regarding the holding of by-elections in the five constituencies of Trichy East, Viralimalai, Perundurai, Ambasamudram, and Karur, petitioner Venkatachalapathy has filed a caveat petition in the Supreme Court, requesting that no orders be passed without hearing his side of the arguments.