அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?

  • டெல்லி: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய், தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை இன்று நிறைவு செய்தார். இரண்டு நாட்கள் நீடித்த இந்த உயர் மட்டப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார். எனினும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்காமல் சென்னை திரும்பியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணம் முழுக்க மாநில நிர்வாகம் மற்றும் தமிழக உரிமைகளை மையப்படுத்தியே திட்டமிடப்பட்டிருந்தது.

    Advertisement

    பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியை அவரது சேவா தீர்த் இல்லத்தில் சந்தித்த முதலமைச்சர் விஜய், சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் உரையாடினார். இச்சந்திப்பின்போது தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை அடங்கிய விரிவான மனுவை பிரதமரிடம் ஒப்படைத்தார். குறிப்பாக, அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக பாட வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மாநில உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும், DRDO-வின் CABS மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கர்த்தவ்ய பவனில் சந்தித்த விஜய், தமிழகத்தின் உள்கட்டமைப்பு, நெடுஞ்சாலை மற்றும் தொழில் வழித்தடத் திட்டங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீட்டை விரைவாக வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.

    இந்த நிர்வாக ரீதியான சந்திப்புகள் வெற்றிகரமாக அமைந்தாலும், அரசியல் ரீதியாக 'ரெயின்செக்' ஆகிய 10 ஜனபத் இல்ல சந்திப்பு நடைபெறவில்லை. விஜய் டெல்லி வருவதற்கு முன்பே காங்கிரஸ் தலைமையகத்துக்கு வெளியே இருவரின் படங்களுடன் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிவரை அந்த சந்திப்பு நடக்கவில்லை.

    Advertisement

    கடந்த ஏப்ரல் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆதரவுடன் 144 உறுப்பினர்களின் ஆதரவோடு மே 13 அன்று பெரும்பான்மையை நிரூபித்தார். தற்போது அவரது அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக உள்ளனர்.

    இந்நிலையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸை டெல்லியில் புறக்கணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ஆய்வாளர்கள் இதை இரு வேறு கோணங்களில் பார்க்கின்றனர். TVK வட்டாரங்கள் இது முழுக்க மாநில அரசு பயணம் என்றும், தேசிய அரசியலை கலக்க விரும்பவில்லை என்றும் விளக்குகின்றன. எதிர்க்கட்சியினர் இது திட்டமிட்ட நகர்வு என்றும், தேசிய கட்சிகளின் நிழலில் இருந்து விலகி தனித்து நிற்கும் சமிக்ஞை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் புள்ளிகள் தரப்பில், "இது முற்றிலும் ஒரு மாநில முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ அரசுப் பயணம். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியையும் திட்டங்களையும் பெறுவதே இதன் நோக்கம். இதில் மாநிலக் கூட்டணி அரசியலையும், தேசிய எதிர்க்கட்சிகளின் சமன்பாடுகளையும் கலக்க முதல்வர் விரும்பவில்லை" என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.
    மறுபுறம், எதிர்க்கட்சியினரோ விஜய் திட்டமிட்டே காங்கிரஸிடமிருந்து தள்ளி நிற்கிறார் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

    காத்திருந்து ஏமாந்த ராகுல்

    டெல்லியில் பாஜக தலைமையை மட்டும் முன்னிலைப்படுத்தி, தனக்கு ஆட்சிக்கட்டிலில் முட்டுக்கொடுத்த காங்கிரஸைப் புறக்கணிப்பதன் மூலம், தான் எந்தவொரு தேசியக் கட்சியின் நிழலிலும் இயங்க விரும்பவில்லை என்ற தெளிவான அரசியல் சமிக்ஞையை விஜய் விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இல்லையென்றால் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் ராஜினாமா செய்து ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறார்கள். இடைத்தேர்தல் வரப்போகிறது. அப்படி இருக்க காங்கிரஸ் தயவு ஏன் என்று விஜய் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    அதேபோல் இன்னொரு பக்கம் சோனியா, ராகுல் இருவருமே விஜய் வருவார் என்று காத்திருந்ததாக கூறப்படுகிறது. விஜய் வருவதற்காக கட் அவுட் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு உணவும் தயாராக இருந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் விஜய் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. அமித் ஷாவை சந்திக்காமல் ராகுலை சந்தித்து கோபத்தை சம்பாதிக்க வேண்டாம் என்று விஜய் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.

    முதலமைச்சர் விஜய்யின் இந்த அரசியல் தவிர்ப்பு அடுத்தக்கட்டத்தில் தமிழக கூட்டணி அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Tamil Nadu CM Vijay's Delhi Visit: Met Modi & Nirmala But Skipped Sonia-Rahul Meet – Big Political Buzz!